சுடச்சுட

    

    காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு:கொலை செய்யப்பட்டாரா? போலீஸார் விசாரணை

    By கோவை  |   Published on : 12th June 2014 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் காணாமல் போன இளைஞர் ஒருவரது உடல் கழிவுநீர் கிணற்றில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமநாராயணன் (32). இவர் கோவை, சிட்கோ பகுதியில் உள்ள குறிச்சி ஹவுசிங் யுனிட் பகுதியில் தங்கி, அவிநாசி சாலை, தென்னம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் உற்பத்தி ஆலையில் துணைநிலை பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 24-ஆம் தேதி முதல் ராமநாராயணன் மாயமானார். அவரது தாயார் மற்றும் உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இதுகுறித்து போத்தனூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் அவர் காணாமல் போனது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் உக்கடம் கழிவுநீர்ப் பண்ணை பகுதியில் உள்ள 30 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் தேங்கிய கிணற்றின் அருகே நின்ற ராமநாராயணனின் பைக் மீட்கப்பட்டது. போலீஸார் ராமநாராயணனின் உறவினர்களிடம் காட்டி அதை உறுதி செய்தனர்.

    அருகிலிருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தக் கிணறு அருகே பைக்கை நிறுத்தி இருவர் சில நாள்களுக்கு முன்னர் அமர்ந்து மது அருந்தியதாக தகவல் கிடைத்தது.

    இதனால் போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. புதன்கிழமை உதவி ஆணையர் ராமசந்திரன் மேற்பார்வையில் பொக்லைன் எந்திரம் மூலமாக கிணற்றில் உள்ள குப்பைகளை அகற்றிவிட்டு பார்க்கையில் ஆண் ஒருவரது உடல் சிதிலமடைந்த நிலையில் கிணற்றுக்குள் கிடப்பது கண்டறியப்பட்டது.

    அதைத் தொடர்ந்து கோவை தெற்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மக்கள் உதவியுடன் அந்த உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெரிய கடைவீதி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மீட்கப்பட்ட உடல் ராமநாராயணனுடையது என்பதை உறுதி செய்துள்ளோம். வியாழக்கிழமை பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து முழுமையாக தெரிந்து விடும். இது தொடர்பாக அவரது நண்பர் ஒருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai