சுடச்சுட

    

    சிறுவாணி அணைப் பிரச்னை தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற கோவை மாமன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர் மீனா லோகநாதனின் பேச்சால் திமுக, அதிமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கோவை மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மேயர் (பொறுப்பு) துணை மேயர் லீலாவதி உண்ணி தலைமை தாங்கினார்.

    கூட்டம் துவங்கியவுடன் திமுக மாமன்ற உறுப்பினர் குழுத் தலைவர் நந்தகுமார், கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையை அடைக்கும் கேரள மாநிலத்தைக் கண்டித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    சுகாதாரக் குழுத் தலைவர் தாமரைச்செல்வி, கடந்த 83 ஆண்டுகளாக சிறுவாணி அணையிலிருந்து கோடைக்காலத்தில் 30-க்கு மேற்பட்ட தடவை இறுதியிருப்புக்குக் கீழுள்ள நீரை எடுத்துள்ளோம். இப்போது கேரள அரசு குகை நீர்ப்பாதையை அடைத்ததைக் கைவிட வேண்டும். வரும் 13-ஆம் தேதி ஆலப்புழையில் நடக்கும் பேச்சுவார்த்தையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    திமுக உறுப்பினர் மீனா லோகநாதன், மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதும் சிறப்புக் கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போதும் கேரள அரசைக் கண்டித்து சிறப்புக் கூட்டம் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும் என்றார்.

    அவர் இவ்வாறு கூறியவுடன் மேயர் (பொறுப்பு) லீலாவதி உண்ணி, பேச்சுவார்த்தை நடைபெறும் சூழ்நிலையில் இதுபோல கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் பார்த்துக் கொள்வார். மீனா லோகநாதன் இவ்வாறு பேசக் கூடாது என்றார்.

    ஆனால் தொடர்ந்து மீனா லோகநாதன் பேசிக் கொண்டிருந்ததால், அதிமுகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் அன்னம்மாள், குணசுந்தரி உள்ளிட்ட சில மாமன்ற உறுப்பினர்கள் மீனா லோகநாதனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீனா லோகநாதனை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

    இரு தரப்பினரும் கத்தியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை அவையில் இருந்து வெளியேறுமாறு மேயர் லீலாவதி உண்ணி உத்தரவிட்டார். ஆனால் அவையைவிட்டு வெளியேற முடியாது என்று மீனா லோகநாதன் அமர்ந்து கொண்டார்.

    அவரது இடைநீக்க உத்தரவை நீக்க வேண்டும். இனி இவ்வாறு பேசக் கூடாது. மக்கள் பிரச்னையை மட்டும் இங்கு பேசிக்கொள்ளலாம் என்று வடக்கு மண்டலத் தலைவர் ராஜ்குமார் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மீனா லோகநாதனின் இடைநீக்க உத்தரவை லீலாவதி உண்ணி திரும்பப் பெற்றார். சிறிதுநேரம் கழித்து மீண்டும் மீனா லோகநாதன் எழுந்து பேசினார். அவருக்குப் பேச அனுமதியில்லை என்று மேயர் பொறுப்பு லீலாவதி உண்ணி தெரிவித்தார். மக்கள் பிரச்னையைப் பேச வேண்டும் என்ற மீனா லோகநாதனுக்கு, "எழுதிக் கொடுங்கள்' என்று லீலாவதி உண்ணி தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த மீனா லோகநாதன், மேயர் இருக்கை முன்பு திடீரென அமர்ந்துகொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் போலீஸாரை வரவழைத்து மீனா லோகநாதன் வெளியேற்றப்பட்டார்.

    வெளியேறிய மீனா லோகநாதன், வராந்தாவில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தார். அவருடன் திமுக உறுப்பினர்கள் சிலரும் அமர்ந்து கொண்டனர்.

    திமுகவைச் சேர்ந்த வீரகோபால், மு.ராமநாதன் ஆகியோர் தகவல் தெரிந்து மீனா லோகநாதன் உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு வந்தனர்.

    அதன்பின் கூட்டம் முடிந்து வந்த அதிமுகவைச் சேர்ந்தவர்கள், மாமன்ற உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் கூட்டம் நடக்குமிடத்துக்கு வரக் கூடாது என்று கோஷமிட்டனர். இதனால் அதிமுக, திமுகவினருக்கு இடையில் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

    உரிய அனுமதியில்லாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்று காவல்துறையினர்

    தெரிவித்ததை அடுத்து, மீனா லோகநாதன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்; திமுகவினரும் வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து

    அதிமுகவினரும் வெளியேறினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai