Enable Javscript for better performance
துபாயில் வேலை வாங்கித் தருவதாக தேங்காய் வியாபாரியிடம் ரூ. 5 லட்சம் மோசடி- Dinamani

சுடச்சுட

    

    துபாயில் வேலை வாங்கித் தருவதாக தேங்காய் வியாபாரியிடம் ரூ. 5 லட்சம் மோசடி

    By கோவை,  |   Published on : 12th June 2014 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தேங்காய் வியாபாரியிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்த நபரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், வேப்பங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செபாஸ்டின் (28). இவர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

    அதில் கூறியிருந்ததாவது:

    கோவை மாவட்டம், சோமனூரில் சகோதரர் ஒருவருடன் தங்கி தான் தேங்காய் ஏற்றுமதி வியாபாரம் செய்து வருவதாக, கடந்த 2011-ஆம் ஆண்டு எனது நண்பர் இப்ராகிம் மூலமாக திருநெல்வேலி மாவட்டம், விளாத்திக்குளம், பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்த ஆர்.கனகராஜ் (39) என்பவர் அறிமுகமானார்.

    அவர் தனது நண்பர் வெங்கட் என்பவர் துபாயில் இருப்பதாகவும், அவர் மூலமாக துபாயில் எனக்கு வேலை வாங்கிக் கொடுத்து, தேங்காய் ஏற்றுமதி செய்யத் தேவையான உதவிகளையும் செய்வதாகவும் தெரிவித்தார். தேங்காய் ஏற்றுமதி செய்யவும், எனக்கு பாஸ்போர்ட், விசா எடுக்கவும் ரூ. 10 லட்சம் பணம் தேவை என்றும் கூறினார்.

    அதை நம்பி அவரிடம் ரூ. 8.5 லட்சம் பணத்தை கடந்த 2011 பிப்ரவரி 2-ஆம் தேதி சென்னை, ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொடுத்தேன். ஆனால் சொன்னபடி அவர் எனக்கு வேலை வாங்கியும் தரவில்லை; தேங்காய் ஏற்றுமதி செய்யவும் இல்லை.

    பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. மீண்டும் அவரைச் சென்று பார்த்த போது ரூ. 3.5 லட்சம் பணத்தைக் கொடுத்தார். மீதி பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டார். அவர்மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் உத்தரவுப்படி மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந் நிலையில் திருநெல்வேலியில் கனகராஜ் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து, ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சென்ற தனிப்படை போலீஸார் புதன்கிழமை அதிகாலை கனகராஜைக் கைது செய்தனர்.

    அவர் இதேபோல வேறு யாரிடமும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai