சுடச்சுட

    

    அனுமதியின்றி விடுதி நடத்திய டிஇஎல்சி நிர்வாகம்

    By பொள்ளாச்சி  |   Published on : 13th June 2014 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சியில் இரு மாணவிகள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், அவர்கள் தங்கியிருந்த மாணவர் விடுதி அனுமதியின்றிச் செயல்பட்டது தெரியவந்துள்ளது.

    பெண்களைத் தங்கவைத்திருந்த இந்த மாணவர் விடுதியில் பெண் காப்பாளர் நியமிக்கப்படவில்லை. மேலும், ஆண்களும் பெண்களும் ஒரே அறையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு காவலாளியோ வார்டனோ விடுதியில் எப்போதும் தங்குவதில்லை என்கின்றனர் இங்கு தங்கியுள்ள மாணவர்கள்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரண்டு மர்ம நபர்கள் ஹாஸ்டலுக்கு வந்து ஒரு மாணவியைத் தாக்கிச் சென்றதாகத் தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள் விடுதி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த விடுதி குறித்து கேட்டபோது, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி கூறுகையில் ""இங்கு மாணவர் விடுதி நடத்த பொள்ளாச்சி டிஇஎல்சி நிர்வாகம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் எந்த அனுமதியும் பெறவில்லை'' என்றார்.

    ஆட்சியரிடம் புகார்: கடந்த மார்ச் மாதம் அனைத்து மாணவர் கூட்டமைப்பின் நிர்வாகியான பொள்ளாச்சியைச் சேர்ந்த சாகுல் அமீது, கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் சமூகநலத் துறை அலுவலர்களுக்கும் இந்த மாணவர் விடுதி பற்றி புகார் மனு அனுப்பியுள்ளார். இங்கு பெண் காப்பாளர்கள் இல்லாததால் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சரியான உணவு வழங்கப்படுவதில்லை என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார். ஆனால், அந்த மனுவின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மாணவர் விடுதியின் முன்னாள் மேலாளர் எபிநேசர் கூறுகையில், ""இந்த விடுதியில் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இந்த தேவாலயத்தின் பாதிரியார் மீது திருச்சியில் பணமோசடி செய்தற்காக தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்'' என்றார். தேவாலய உறுப்பினர் டேனியல் பூரணன் கூறுகையில், ""இந்த மாணவர் விடுதியை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டுமே நிர்வாகம் செயல்படுகிறது. ஓராண்டுக்கு முன் இந்த விடுதியில் இங்குள்ள நிர்வாகி ஒருவரே மாணவி ஒருவரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அந்தச் சம்பவம் மறைக்கப்பட்டுவிட்டது. அந்த மாணவி தற்போது திருப்பூரில் உள்ளார்'' என்றார். ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால் கூறுகையில், ""மாணவர் விடுதியில் உள்ள மாணவர்களை நிர்வாகிகள் வீட்டுப் பாத்திரம் கழுவுதல் உள்ளிட்ட எடிபிடி வேலைகளைச் செய்யவைத்துள்ளனர்'' என்றார்.

    பொள்ளாச்சி மக்கள் கூறுகையில், ""இரண்டு சிறுமிகளை கடத்திச் சென்று கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அனைவரையும் கலங்கவைத்துள்ளது. இந்த விடுதியைக் காட்டி ஸ்வீடன் நாட்டிலிருந்து பெருமளவு நிதிபெற்று மோசடி செய்துள்ளனர். எனவே டிஇஎல்சி தேவாலய நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடுதியை மூட வேண்டும்'' என்றனர்.

    இந்த மாணவர் விடுதிப் பகுதியிலும் பேருந்து நிலையத்திலும் போதை ஊசி போடுபவர்கள், குடிமகன்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai