சுடச்சுட

    

    பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கும் பல்கலை. தினக்கூலி பணியாளர்கள்!

    By கோவை  |   Published on : 13th June 2014 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் தினக்கூலிப் பணியாளர்களாகப் பணிபுரிபவர்களில் தகுதியான நூற்றுக் கணக்கானோர் தொகுப்பூதிய முறை மற்றும் பணி நிரந்தரம் கோரி விண்ணப்பித்து பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர்.

    கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் 325-க்கு மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். மேலும், 900 பேர் தினக்கூலிகளாக பல்வேறு நிலைகளில் பணியாற்றுகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் 350-க்கு மேற்பட்டவர்கள் தினக்கூலிகளாக பல்வேறு பொறுப்புகளில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தினக்கூலி பணியாளர்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருபவர்களின் எண்ணிக்கை 200 வரை இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. இவர்களில் பலர் தினக்கூலி பணியாளர்கள் நிலையில் இருந்து தொகுப்பூதிய முறைக்கு மாறுவதற்குத் தகுதியானவர்கள்.

    போதிய தகுதிகள் இருப்பதால் தினக்கூலி பணியாளர்கள் நிலையில் இருந்து தொகுப்பூதிய முறைக்கு மாற்றக் கோரி இவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல தொகுப்பூதிய முறையில் இருப்பவர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரியும் விண்ணப்பித்துள்ளனர்.

    தொகுப்பூதிய முறை மற்றும் பணி நிரந்தரம் கோரி விண்ணப்பித்து பல ஆண்டுகளாகியும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக தினக்கூலி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதில், 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள், தொகுப்பூதிய முறைக்கு மாற்றலாம் என்றும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யலாம் என்றும், பல்கலைக்கழகத் தீர்மானம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.பல்கலைக்கழகம் சார்பில் அண்மையில் உதவி தொழில்நுட்ப அலுவலர், இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல்), இளநிலை பொறியாளர் (சிவில்), அலுவலக உதவியாளர், உதவியாளர், புகைப்பட நிபுணர், ஓட்டுநர் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத அலுவலர் பணிகளுக்கு (தாற்காலிக பணியிடங்கள்) சமீபத்தில் 48 பேர் நியமிக்கப்பட்டனர்.

    இவர்களில் பெரும்பாலானோர் தொகுப்பூதிய அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சுமார் ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

    பல்கலைக்கழகம், "வாக் இன் இன்டர்வியூ' முறையில் தாற்காலிகப் பணியாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நல்ல ஊதியத்திற்கு நியமனம் செய்வது தொடரும் நிலை உள்ளது. இதனால், ஏற்கெனவே தினக்கூலிகளாகப் பணிபுரியும் பணியாளர்களில் தொகுப்பூதிய முறைக்கு மாறத் தகுதி உள்ளவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

    தினக்கூலி பணியாளர்களில் தொகுப்பூதிய முறைக்கு மாறத் தகுதியுள்ளவர்கள் இருக்கும் நிலையிலும், புதிதாக தாற்காலிகப் பணியாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமிப்பது தங்களைப் புறக்கணிப்பதாக உள்ளது என்று இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுதொடர்பாக, தினக்கூலி பணியாளர்கள் மேலும் கூறியது:

    பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கியவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவுமூப்பு உள்ளவர்களை பணிக்குத் தேர்வு செய்யாமல், பொதுவானதாக, "வாக் இன் இன்டர்வியூ' முறையில் பணியாளர்களை நியமனம் செய்வது ஏற்புடையதல்ல.

    தினக்கூலி பணியாளர்களாகப் பணிபுரியும் பெண்கள் உரிய சான்றிதழ்களைக் கொடுத்து பேறுகால விடுப்பில் சென்றாலும்கூட, அவர்களை பணியில் இருந்து நீக்கி விடுகின்றனர். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்குவதில்லை. இந்நிலையில், தினக்கூலி பணியாளர்களை அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் நியமித்து வருகின்றனர்.

    பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளிலும் அதிக எண்ணிக்கையில் தினக்கூலி பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

    போதிய தகுதிகள் இருந்தும், தொகுப்பூதிய முறை மற்றும் பணி நிரந்தரம் கோரி விண்ணப்பித்தாலும் எங்களது கோரிக்கைகள் கவனிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மேலும், தொகுப்பூதிய முறை மற்றும் பணி நிரந்தரம் செய்யும் விஷயத்தில் கையாடல் நடப்பதால், முறையான, தகுதியுள்ளவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தகுதியான தினக்கூலி பணியாளர்களை தொகுப்பூதிய அடிப்படையிலும், பணி நிரந்தரம் செய்திடவும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai