சுடச்சுட

    

    போலி ஆவணங்கள் மூலமாக நிலமோசடி: பெண் ரியல் எஸ்டேட் அதிபரின் சகோதரர் கைது

    By கோவை  |   Published on : 13th June 2014 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அருகே, போலி ஆவணங்கள் மூலமாக பிறருக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட பெண் ரியல் எஸ்டேட் அதிபரின் சகோதரரை, மற்றொரு வழக்கில் வியாழக்கிழமை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் கைதுசெய்தனர்.

    கோவை, வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகள் அமுதா மீனாட்சி (33). இவர்கள் இருவரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி, துடியலூர், குருடம்பாளையம் பகுதியில் வேறொருவருக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக விற்பனை செய்து கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அமுதா மீனாட்சி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மகாதேவனைப் போலீஸார் தேடிவருகின்றனர். அவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கோவை, வெள்ளக்கிணறு பிரிவைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சாந்தினி மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்துள்ளார்.

    அதில், அமுதா மீனாட்சி, அவரது தந்தை மற்றும் அமுதா மீனாட்சியின் சகோதரர் கார்த்திக் முருகானந்தம் (30) ஆகியோர், கடந்த 2008-ஆம் ஆண்டு ரூ. 11 லட்சம் பணத்தை தன்னிடம் பெற்றுக்கொண்டு போலி ஆவணங்களைக் காட்டி, பிறருக்குச் சொந்தமான நிலத்தை விற்றுவிட்டனர். சமீபத்திலேயே அவர்களது மோசடி தெரியவந்தது. எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    டி.எஸ்.பி. மாடசாமி உத்தரவின் பேரில், வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ. தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, வியாழக்கிழமை காலை கார்த்திக் முருகானந்தத்தை கைது செய்தனர்.

    பிறகு அவரை கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். விரைவில் இந்த வழக்கில் அமுதா மீனாட்சி கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கைது செய்யப்பட்ட கார்த்திக் முருகானந்தம் தகவல் தொழில்நுட்பம் படித்தவர். வங்கியில் ரூ. 25 லட்சம் கடன் வாங்கி, கடந்த 2006 முதல் 2008-ஆம் ஆண்டு வரை வெள்ளக்கிணறு பகுதியில் கட்டட கட்டுமான கற்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நிறுவனத்தை மற்றொருவருக்கு விற்றுவிட்டு தனது சகோதரியுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    மேலும், பள்ளி ஆசிரியை சாந்தினி தனது சகோதரர் ஒருவருக்கு இவர்களிடம் ரூ. 13 லட்சம் பணம் செலுத்தி நிலம் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

    இதுவரை அமுதா மீனாட்சி உள்ளிட்டோர் மீது 23 புகார்கள் மூலமாக ரூ. 2 கோடி வரை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai