சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் வட்ட ஜமாபந்தியில் 753 மனுக்கள்

    By மேட்டுப்பாளையம்,  |   Published on : 13th June 2014 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம் வட்டத்தில் 4 நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் 19 கிராம மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 753 மனுக்கள் பெறப்பட்டன. இதில், உரிய விசாரனைக்குப்பின், 133 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    மேட்டுப்பாளையம் வட்டத்தில் ஜமாபந்தி கடந்த 4-ஆம் தேதி, மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. இதில், கோவை சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சண்முகராஜ் பங்கேற்று, 17 கிராம மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.

    கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற ஜமாபந்தியில் கெம்மாரம் பாளையம், வெள்ளியங்காடு, காளம்பாளையம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து 126 மனுக்களும், 5-ஆம் தேதி நடைபெற்ற ஜமாபந்தியில் மருதூர், காரமடை, பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஊராட்சி மக்களிடமிருந்து 120 மனுக்களும், 10-ஆம் தேதி நடைபெற்ற ஜமாபந்தியில் நெல்லித் துறை, ஓடந்துறை, தேக்கம்பட்டி, சிக்கதாசம்பாளையம், சிறுமுகை, ஜடையம்பாளையம் ஊராட்சி மக்களிடமிருந்து 273 மனுக்களும், 11-ஆம் தேதி நடைபெற்ற ஜமாபந்தியில் இரும்பறை, சின்ன கள்ளிப்பட்டி, இலுப்பநத்தம், மூடுதுறை, பள்ளேபாளையம் ஊராட்சி மக்களிடமிருந்து 234 மனுக்களும் பெறப்பட்டன.

    இதில், பட்டா மாறுதல் கேட்டு 253 மனுக்களும், வீட்டுமனை பட்டா கேட்டு 124 மனுக்களும், முதியோர் உதவி தொகை கேட்டு 75 மனுக்களும், நில அளவை உள்பிரிவிற்கு 74 மனுக்களும், வாரிசு சான்றிதழ் கேட்டு 29 மனுக்களும், குடும்ப அட்டை கோரி 14 மனுக்களும், இதர இனங்களுக்கு 184 மனுக்களும் என மொத்தம் 753 மனுக்கள் பெறப்பட்டன. இதில், தகுதியான 133 மனுக்கள் மீது தீர்வு வழங்கப்பட்டது.

    இறுதி நாளான புதன்கிழமை (ஜூன் 11) நடைபெற்ற முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கோவை, தனித் துணை ஆட்சியர் சண்முகராஜ் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். தனி வட்டாட்சியர் ரங்கராஜ் வரவேற்றார்.

    இதில், சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ஒருவருக்கு ரூ. 1,25,000, விபத்து நிவாரணத்தின்கீழ் ஒருவருக்கு ரூ. 1 லட்சம், நலிந்தோர் நலத்திட்டத்தின்கீழ் 3 பேருக்கு ரூ. 30 ஆயிரம், இயற்கை மரண இழப்பீடு 3 பேருக்கு ரூ. 37,500, 10 பேருக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் வீட்டுமனைப் பட்டா என ரூ. 4.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதில், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்ட வழங்கல் அலுவலர் ரத்தினம், வருவாய் ஆய்வாளர்கள் முத்துசாமி, சுகுணா, கிராம நிர்வாக அலுவலர்கள் தனசீலன், ரவி, மூர்த்தி, யோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். சமூக நலப் பாதுகாப்புத் திட்டத் தனி வட்டாட்சியர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai