சுடச்சுட

  

  இருமாநில பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை

  By கோவை,  |   Published on : 14th June 2014 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிறுவாணி குடிநீர் பங்கீடு தொடர்பாக கேரளத்தில் இருமாநில அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தில், அணையின் அடிமட்ட குடிநீர் குழாய் அடைப்பு விவகாரம் குறித்து எவ்வித இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

  கோவை நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை, மேற்குத் தொடர்ச்சி மலையில் கேரள எல்லையில் அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 15 மீட்டர் ஆகும். அணையின் நிலமட்டத்துக்கு கீழ் பழங்கால தடுப்பணையும், நீர்த்தேக்கமும் உள்ளது. அதோடு நிலமட்டத்துக்கு கீழ் 6.9 மீட்டர் வரை நீர்த்தேக்கமும், அடிமட்ட குடிநீர் குழாயும் உள்ளது.

  அணையின் நீர்மட்டம் நிலமட்டத்துக்கு வந்தாலும், இந்த அடிமட்ட குடிநீர் குழாய் வழியாக 6 கோடி லிட்டர் நீரைப் பெற முடியும். கடந்த 2013ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டம் குறைந்தபோது அடிமட்ட குடிநீர் குழாய் வழியாக நீர் எடுத்து விநியோகம் செய்யப்பட்டது.

  கடந்த வாரம் அடிமட்ட குடிநீர் குழாயை அடைக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்ததே இதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டது.

  கேரளத்தின் இந்த முடிவை எதிர்த்து கோவையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சார்பில் கேரள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் கேரள அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக, சிறுவாணி அணையின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் கோவை மாநகராட்சி செலுத்தி வரும் தொகையை 2014 - 15ஆம் ஆண்டுக்கு ரூ.9 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவித்தது.

  இத்தகைய பிரச்னைகளுக்கு இடையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கோவை மாநகராட்சி அதிகாரிகள் அடங்கி தமிழக குழுவினர் மற்றும் கேரள நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை கூட்டம் கேரள மாநிலம் ஆலப்புழையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில், சிறுவாணி அணையிலிருந்து கோவைக்கு இனிமேல் அளவீடு செய்தே குடிநீர் விநியோகம் செய்யப்படும்; இதற்காக அணையின் உள்பகுதியில் உள்ள நீரேற்று மையத்தில் கணக்கீடு கருவி பொருத்தப்படவுள்ளது என கேரள நீர்வள ஆதாரத் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவாணி அணையை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

  அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து இருமாநில அரசும் ஆலோசித்து முடிவெடுக்கட்டும்; பராமரிப்புக் கட்டணம் ரூ.9 கோடி செலுத்துவது குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கலாம் என்றும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  இது குறித்து கலந்தாலோசிப்பதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  முக்கியமாக அடிமட்ட குடிநீர் குழாய் அடைப்பு விவகாரத்தில் தமிழகத்துக்கு சாதகமான எவ்வித இறுதி முடிவும் எட்டப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அடுத்து நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இது குறித்து இறுதி முடிவு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai