சுடச்சுட

  

  டிஇஎல்சி தேவாலய நிர்வாகிகளை கைது செய்யக் கோரிக்கை

  By பொள்ளாச்சி,  |   Published on : 14th June 2014 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொள்ளாச்சியில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் டிஇஎல்சி தேவாலய நிர்வாகிகளைக் கைது செய்யவேண்டும் என்று பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

  பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டுவந்த டிஇஎல்சி தேவாலய மாணவர் விடுதியில் தங்கியிருந்த 2 சிறுமிகளை புதன்கிழமை இரவு மர்மநபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

  இச்சம்பவத்தையடுத்து, வியாழக்கிழமை விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால், அந்த விடுதியை நடத்திய டிஇஎல்சி தேவாலய நிர்வாகத்தின் மீது இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளருமான வி.எஸ்.பரமசிவம் கூறுகையில், "டிஇஎல்சி தேவாலய பாதிரியார் மற்றும் அந்த நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் கைது செய்யவேண்டும். மேலும், அவர்களுக்கு வரும் வெளிநாட்டு பணம் யார் மூலமாக வருகிறது? அதை என்ன செய்துள்ளார்கள் என்பது குறித்தும் விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கவேண்டும்' என்று தெரிவித்தார்.

  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆனைமலை ஒன்றியச் செயலாளர் மேரிசுதா கூறுகையில், "குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதுடன் டிஇஎல்சி தேவாலய நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்.

  மேலும் இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், "விடுதி நிர்வாகம் வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறது. குற்றம் செய்ய வழிவகுத்த விடுதி நிர்வாகத்தினரைக் கைது செய்யவேண்டும். இல்லாவிட்டால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவிப்பதுடன், போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றனர்.

  இதுகுறித்து, மேற்கு மண்டல காவல் துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறுகையில், "பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. அவர்கள் பிடிபட்டவுடன் அடுத்த நடவடிக்கையாக விடுதி நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்தப்படும்' என்றார்.

  பொள்ளாச்சி சார் ஆட்சியர் ரஷ்மி சித்தார் ஜகடே கூறுகையில், "விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

  பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இழப்பீடு: பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவருக்கும் தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.

  அதன்படி, வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் முதல்வர் அறிவித்திருந்த தலா ரூ. 3 லட்சம் தொகையை சிறுமிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தி அதன் கணக்குப் புத்தகங்களை அவர்களிடம் வழங்கினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai