சுடச்சுட

  

  நீட்ஸ் திட்டம்: முதல் தலைமுறையினர் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி

  By கோவை  |   Published on : 14th June 2014 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோர் புதிய தொழில்கள் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட உள்ளது.

  இத்திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு, தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த தொழில் திட்டங்களுக்கு நிதி நிறுவனங்களில் நிதியுதவி பெற்றுத் தரப்படும். இத்திட்டத்தினை மாவட்ட தொழில் மையமும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமும் இணைந்து செயல்படுத்துகின்றன.

  இத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை திட்ட மதிப்பீட்டு தொகை உள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களை தொடங்கலாம். இதற்கென தமிழக அரசு 25 சதவீத மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்குகிறது.

  இத்திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35, இதர சிறப்பு பிரிவினருக்கு (மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள்) அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தின் மூலம் தொழில்சார் பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமும் பங்களிப்பு செய்ய வேண்டும்.

  புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். இத்திட்டத்தின் அரசாணை, விண்ணப்பம் உள்ளிட்ட ஆவணங்களையும் மாவட்ட தொழில் மையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  இத்திட்ட பயனாளிகள் மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு மாத மேலாண் பயிற்சி ரூ.3000 உதவித் தொகையுடன் அளிக்கப்படும். இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் 57 நபர்களுக்கு ரூ.6.47 கோடி மானியத்துடன் கூடிய ரூ.22 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு 2014-15ல் கோவை மாவட்டத்திற்கு ரூ.4.80 கோடி மானியத் தொகை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  இத்தகவலை, மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் ச.அசோகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai