சுடச்சுட

    

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விக்கூடத்தில் தொடரும் முறைகேடு?

    By கோவை  |   Published on : 16th June 2014 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விக்கூட பயிற்று மையங்களை கத்தார் தலைநகர் தோஹா மற்றும் மும்பையில் தொடங்குவதற்கு அனுமதி வழங்க லட்சக் கணக்கில் பணம் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

    கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விக்கூடத்தின் கீழ் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, நேபாளம், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தனியார் பயிற்று மையங்கள் இயங்கி வருகின்றன. 600-க்கு மேற்பட்ட தனியார் பயிற்று மையங்கள் இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புதிய கல்வி மையங்களைத் திறக்க பாரதியார் பல்கலைக்கழகம் அனுமதி வழங்குகிறது. தனியார் பயிற்று மையங்களைத் தொடங்க விரும்புவோர், பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ள தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

    மேலும், பயிற்று மையம் தொடங்க விண்ணப்பம் செய்த பிறகு பல்கலைக்கழகத்தின் தொலைமுறை கல்விக்கூடத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரை உள்ளடக்கிய ஒரு குழு நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். அதன்பிறகு அந்தப் பயிற்று மையத்தின் தகுதிகேற்ப படிப்புகளை நடத்த பல்கலைக்கழகம் அனுமதி வழங்குவது நடைமுறையாகும்.

    ஆனால், தனியார் பயிற்று மையங்கள் தொடங்க விண்ணப்பிக்கும் நபர்களிடம் பல்கலைக்கழக தொலைதூர கல்விக்கூடத்தின் அனுமதி வேண்டுமெனில் லட்சக் கணக்கில் "கப்பம்' கட்ட வேண்டும் என்று நிர்பந்தம் செய்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி, மும்பையைச் சேர்ந்த ஸ்டெர்லிங் மேலாண்மைக் கல்வி நிறுவனம் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையத்தின் கிளையாகச் செயல்பட கடந்த மே 8, 2012-இல் விண்ணப்பித்தது.

    இதைத் தொடர்ந்து அந்த விண்ணப்பத்தின் மீது ஆய்வு செய்ய பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விக்கூட தேசிய ஒருங்கிணைப்பாளரை உள்ளடக்கிய ஒரு குழு நேரில் சென்று உள்கட்டமைப்பு வசதிகசஜ் ஆய்வு செய்தது.

    பிறகு ஆய்வில் திருப்தியடைந்த அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர், பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்விக்கூட அனுமதி வேண்டுமெனில் ரூ. 5 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது.

    அதேவேளையில், பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விக்கூடத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளராக வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளதிலும் முறைகேடுகள் இருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் சந்தேகம் தெரிவிக்கின்றன.

    தொலைதூர கல்விக்கூடத்தில் பயிற்று மையங்களின் மூலம் பெறப்படும் அனைத்து விதமான கட்டணங்களுக்கும் 2 சதவீத கமிஷன் தொகையானது வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கமிஷன் தொகையானது 5 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதாக (பல்கலைக்கழகம் சார்பாக 2 சதவீதமும், பயிற்று மையம் சார்பாக 3 சதவீதமும்) தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதாவது ஒரு மாணவர் சேர்ந்தால் ரூ. 100-க்கு ரூ. 5 கமிஷன் தேசிய ஒருங்கிணைப்பாளருக்குச் செல்லும். அந்த வகையில் எத்தனை ஆயிரம் மாணவர்கள் சேர்கிறார்களோ அதற்கான கமிஷன் தொகை முழுவதும் அவருக்குக் கிடைக்கும். கமிஷன் தொகையாக ஆண்டொன்றுக்கு மட்டும் கோடிக் கணக்கான பணம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், 2009இல் கத்தார் தலைநகர் தோஹாவில் பயிற்று மையம் தொடங்க அனுமதி தருவதற்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த கே.அசோக்ராஜுவிடம், லட்சக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு முறைகேடு நடந்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ""பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் காலத்தில் தான் தொலைதூர கல்விக்கூடத்திற்கென தனியாக தேசிய ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து தான் பயிற்று மையங்களைத் தொடங்க அனுமதி கோருவோரிடம் பணம் வாங்கும் விவகாரம் நடந்து வருகிறது.

    மேலும், பல்கலைக்கழகத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதை எவ்விதத்திலும் ஏற்க முடியாது. இதில் கமிஷனாகப் பெறும் பணம் யாருக்குச் செல்கிறது என்பது பற்றி தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும்'' என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

    இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சி.பிச்சாண்டி கூறியது:

    தனிநபர் ஒருவருக்கு எந்தக் காரணமும் இல்லாமல் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டத்தை ஒருங்கிணைக்க அனுமதி வழங்கியதே முற்றிலும் முரண்பாடான விஷயம். இந்தச் செயல் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) விதிகளுக்கு எதிரானதாகும்.

    தொலைதூர கல்விக் கூடத்தின் கீழ் தனியார் பயிற்று மையம் தொடங்குவதில் பல கோடி பணம் புரளுகிறது. இதில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக, மத்திய மனிதவளத் துறை தலையிட்டு மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

    இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ஜேம்ஸ் பிச்சையிடம் கேட்டபோது, ""பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்விக் கூடம் கடந்த 9 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்வி முறையில் அனைத்து விஷயங்களும் நேர்மையாகவே நடைபெறுகின்றன'' என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai