Enable Javscript for better performance
செல்வசிந்தாமணி குளத்தில் தூய்மைப்பணி:2,300 பேர் சேவை; 53 டன் குப்பைகள் அகற்றம் - Dinamani

சுடச்சுட

    

    செல்வசிந்தாமணி குளத்தில் தூய்மைப்பணி:2,300 பேர் சேவை; 53 டன் குப்பைகள் அகற்றம்

    By கோவை  |   Published on : 16th June 2014 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, செல்வசிந்தாமணி குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஞாயிற்றுக்கிழமை 2,300 பேர் ஈடுபட்டனர். இதில், 53 டன் குப்பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் அகற்றப்பட்டன.

    கோவையை அடுத்த செல்வபுரம் செல்வசிந்தாமணி குளத்தில் தூய்மைப் பணி திருவிழாவை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

    இந்த தூய்மைப் பணியில் கோவை மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட கவுன்சிலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், அதிவிரைவுப் படை போலீஸார், மாநகர போலீஸார், ஊர்க்காவல் படையினர், மக்கள் பிரதிநிதிகள், மாநகராட்சிப் பணியாளர்களும், சிறுதுளி, ராக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் என சுமார் 2,300 பேர் கலந்து கொண்டனர்.

    செல்வசிந்தாமணி குளத்தில் தேங்கி இருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த தூய்மைப் பணியில் மாநகராட்சியின் 33 லாரிகளும், 18 மினி லாரிகளும், 7 பொக்லைன் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு, 53 டன் எடையுள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் குளத்தில் இருந்து அகற்றப்பட்டன.

    தூய்மைப் பணியைத் தொடங்கிவைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ""மாநகராட்சி பகுதியில் உள்ள 8 பெரிய குளங்கள் மாநகராட்சி மூலம் மேம்படுத்தப்பட உள்ளன. குறிச்சி குளத்திலும் மாநகராட்சி பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மாநகரப் பகுதியில் உள்ள குளங்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்திட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணிகள் தொடங்கப்பட உள்ளன'' என்றார்.

    சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் வேண்டுகோளின்படி குளம் தொடர்ந்து தூய்மைப்படுத்தப்பட்டு, மழைநீர் சேகரிக்கப்பட்டு, இங்குள்ள பறவையினங்களைப் பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக, குளக்கரை பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மரக்கன்றுகளை நட்டார். மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாநகராட்சி ஆணையர் க.லதா, மேயர் (பொறுப்பு) லீலாவதி உண்ணி, கோவை

    எம்.பி. ஏ.பி.நாகராஜன், எம்எல்ஏக்கள் தா.மலரவன், வி.சி.ஆறுக்குட்டி, சேலஞ்சர் துரை, மண்டலக் குழு தலைவர் சாவித்திரி, ஆதிநாராயணன், ராஜ்குமார், கே.ஆர்.ஜெயராமன், பெருமாள்சாமி, நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai