சுடச்சுட

    

    கேரளத்தில் வசிக்கும் தமிழர்களின் தொழிலை காக்க சட்ட நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

    By கோவை,  |   Published on : 17th June 2014 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரளத்தில் வசிக்கும் தமிழர்களின் தொழில், உடமைகளை காக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் இந்து மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

    தமிழகத்தில் இருந்து குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பாக கேரளத்தில் குடியேறி திருவனந்தபுரம், ஆலப்புழை, பாலக்காடு, கோட்டயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர்.

    அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு எவ்வித ஆவணங்களுமின்றி நம்பிக்கையின் அடிப்படையில் சிறு கடன் கொடுத்து வாங்கி தொழில் செய்து பிழைத்து வருகின்றனர்.

    சமீப காலமாக கேரள நிதி நிறுவனங்களின் தூண்டுதலின்பேரில் தமிழர்கள் மீது எவ்வித ஆதாரமும் இன்றி பொய் வழக்கு பதிவு செய்து தமிழர்களை சிறையில் அடைக்கும் சம்பவம் நடைபெறுகிறது.

    கேரள மாநில காவல்துறையின் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக அங்கு வசிக்கும் தமிழர்கள் குறிப்பாக சிறு கடன் கொடுத்து வியாபாரம் செய்து வரும் தமிழர்கள் அனைவரும் மிகுந்த அச்ச உணர்வுடன் உள்ளனர்.

    இதுகுறித்து கேரள முதல்வர் மற்றும் காவல் துறை தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகும் இத்தகைய நடவடிக்கைகள் தொடருகின்றன.

    கேரள மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் தொழிலையும், உடமைகளையும் பாதுகாக்க உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு கேரள முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்குள்ள தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai