சுடச்சுட

    

    தொழிலதிபர் குடும்பத்தை கொல்ல சதி: மருமகன் உள்பட 5 பேர் கைது

    By கோவை  |   Published on : 17th June 2014 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூலிப்படையை ஏவி தொழிலதிபர் குடும்பத்தை கொலை செய்ய சதி செய்ததாக, தொழிலதிபரின் மருமகன் உள்பட 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    இது குறித்து மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியது: கோவை போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது போத்தனூர் மேம்பாலத்தின் கீழ் பதிவு எண் இல்லாமல் ஒரு கார் நின்றதை பார்த்தனர். அந்தக் காரில் இருந்த 4 பேரிடமும் போலீஸார் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து காரில் சோதனையிட்ட போது இரண்டு வீச்சரிவாள், கையுறைகள், மதுபாட்டில் இருந்தது தெரியவந்தது.

    காரில் இருந்தவர்கள் சங்கரன்கோவிலைச் சேர்ந்த கோமதிசங்கர் (22), பல்லடத்தைச் சேர்ந்த நாகராஜ் (23), தஞ்சாவூரைச் சேர்ந்த ரஞ்சித் (26) திருச்சியைச் சேர்ந்த பிரபாகரன் (23) என்பது தெரியவந்தது.

    இவர்களில் கோமதிசங்கரும், நாகராஜும் ஏற்கெனவே குற்ற வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது இவர்களுடன் சிறையில் இருந்த திருப்பூர் மாவட்டம் அமர்ஜோதி கார்டன் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரனுக்கு (30) பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் விக்னேஸ்வரனுக்கும், சுந்தராபுரம் சிட்கோவில் ஃபேப்ரிக் ஆலை நடத்தி வருபவரும் தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் போத்தனூர் கிளை தலைவருமான மாணிக்கத்தின் மகள் நிஷாப்பிரியாவுக்கும் (23) கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இதற்கிடையில் மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் விக்னேஸ்வரன், அவரது தந்தை குணசேகரன் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பின்னர் ஜாமீனில் வெளியே வந்த விக்னேஸ்வரன், தன்னை சிறைக்கு அனுப்ப காரணமான மாணிக்கம், அவரது மனைவி ராஜேஸ்வரி (50), மகன் முரளிகிருஷ்ணன் (19) ஆகியோரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். மனைவியின் குடும்பத்தினரை கொலை செய்துவிட்டால் ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துகள் மனைவிக்கு வந்துவிடும் எனக் கருதிய அவர், கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி அதற்காக கூலிப்படையினரான கோமதிசங்கர், நாகராஜ், ரஞ்சித், பிரபாகரன் ஆகியோருக்கு முன்பணமாக ரூ. 40 ஆயிரம் கொடுத்துள்ளார். கொலை செய்ய உதவியாக கூலிப்படையினருக்கு வரைபடமும் கொடுத்துள்ளார்.

    அந்த வரைபடத்தையும் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கொலை செய்ய கூலிப்படையினரை ஏவிய விக்னேஸ்வரனும் கைது செய்யப்பட்டார் என்றார் ஏ.கே.விஸ்வநாதன்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai