சுடச்சுட

    

    மேட்டுப்பாளையத்தில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 17th June 2014 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையத்தில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கு தனித் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் வழக்குரைஞர் சங்கத்தினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மேட்டுப்பாளையம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் கனகசுந்தரம் தலைமை வகித்தார். சங்கச் செயலர் சிவகுமார், பொருளாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சங்க முன்னாள் தலைவர்கள் சீனிவாசன், வீரபத்திரன், பராந்தக சோழன், வேலுசாமி, உதவித் தலைவர் சம்பத்குமார், முன்னாள் செயலர் செவ்விளம்பரிதி உள்ளிட்டோர் பேசினர்.

    இதில், வழக்குரைஞர் சங்கத் தலைவர் கனகசுந்தரம் பேசியது:

    மேட்டுப்பாளையம் தாலுகாவில் தற்போது வழக்குகளை விசாரிக்க மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நீதிமன்றம் என்று ஒரே நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதனால் வழக்குகள் தேக்கமாகி மேற்படி நீதிமன்றத்தில் 1,400 உரிமையியல் வழக்குகளும், 1,912 குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, தற்போது செயல்பட்டு வரும் நீதிமன்றத்தை சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்களாக தனித் தனியாக பிரிக்க வேண்டும். மேட்டுப்பாளையத்தில் நிரந்தர சார்பு நீதிமன்றம் அமைக்கவேண்டும். சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கு தனித் தனி அரசு வழக்குரைஞர்களை நியமிக்கவேண்டும். அன்னூர் தாலுகாவின் சிவில் வழக்குகளை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்துடன் இணைக்கவேண்டும். புதியதாக கட்டப்பட்டு வரும் நீதிமன்றக் கட்டடத்தில் அமைக்கப்பட்டு வரும் நீதிமன்ற அறை மற்றும் நூலகத்தை அகலப்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென இந்தப் போராட்டத்தின் மூலமாக அரசைக் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.

    இதில், சங்க முன்னாள் செயலர்கள் சாந்தமூர்த்தி, நிர்வாகிகள் உமர் பாரூக், ரங்கராஜ், செந்தில்குமார், செல்வகுமார், பாலசுப்பிரமணி, வழக்குரைஞர்கள் கணேசபாண்டியன், பழனிசாமி, கேசவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். மூத்த வழக்குரைஞர் வெங்கடேசன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai