சுடச்சுட

    

    கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலையில் சுவாமி தரிசனத்திற்கு சென்று பனிக்காற்றில் சிக்கித் தவித்த திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 10 பேரை வனத்துறையினர் மீட்டனர்.

    தற்போது சீசன் முடிவடைந்த நிலையில் வெள்ளியங்கிரி மலையில் யானை, செந்நாய், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    கேரளத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளியங்கிரி மலையிலும் மழைப் பொழிவும், உடல் உறையும் அளவுக்கு பனிக்காற்றும் வீசி வருகிறது. சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறிவிட்டது.

    இந்நிலையில் திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜி.கார்த்திக், கே.உதயகுமார், ஆர்.எஸ்.சந்தீப், கார்த்திக், வினோத்குமார், பிரசாந்த், பாண்டியன் நகரை சேர்ந்த பாலாஜி, அங்கேரிபாளையத்தைச் சேர்ந்த சரவணகுரு, குமரகுரு, குமரானந்தபுரத்தைச் சேர்ந்த வரதராஜ் ஆகிய 10 பேர் வெள்ளியங்கிரி மலையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திங்கள்கிழமை கோவை வந்தனர்.

    பிறகு அவர்கள் வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் மலை ஏறினர்.

    திங்கள்கிழமை பகலில் மலை ஏற முயன்ற மாணவர்கள் குழுவினர், இரவு ஆகியும் திரும்பி வரவில்லை. அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முடியாததால், கோவை மாவட்ட வன அலுவலர் செந்தில்குமாரிடம் பெற்றோர் புகார் செய்தனர்.

    இதையடுத்து போளுவாம்பட்டி வனச்சரகர் தினேஷ்குமார் மேற்பார்வையில் வனவர் பாண்டியராஜன், வனக்காப்பாளர் முருகன், வனக்காவலர் ராஜா மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், பனிக்காற்றில் சிக்கிய மாணவர்களை மீட்கச் சென்றனர்.

    வனத்துறை மீட்புக் குழுவினர் மூன்றாவது மலையில் இருந்த மாணவர்கள் குழுவினரை பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர்.

    வனத்துறை அனுமதியில்லாமல் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லக் கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறி, பெற்றோருடன்  அனுப்பி வைத்தனர்.

    வனத்துறையினர் எச்சரிக்கை

    இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியது: வெள்ளியங்கிரி மலையின் 7 ஆவது மலையில் சுயம்புவாக வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது சீசன் முடிவடைந்த நிலையில், மலையில் சீதோஷ்ண நிலை மாறி விட்டது.

    உடலை உறைய வைக்கும் குளிர், தொடர்ந்து வீசும் பனிக்காற்று, நிற்காமல் பெய்யும் மழையால் மலையில் தொடர்ந்து ஏறுவது மிகவும் சிரமமான விஷயமாகும். அதேபோல ஆள்நடமாட்டமும் குறைந்துவிட்டதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    சீசன் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் யாரும் மலை ஏறக் கூடாது. அதேபோல வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வனத்துறையினரின் அறிவிப்பை பொருட்படுத்தாமல் மலை ஏறுகின்றனர்.

    எனவே, வெள்ளியங்கிரி மலையில் பனிக்காற்று, தொடர் மழை, வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் மலை ஏற யாரையும் அனுமதிப்பதில்லை என்று தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai