சுடச்சுட

    

    சிறுமுகையில் மதுக்கடையை அகற்றக் கோரி அரசியல் கட்சியினர் மறியல்: 120 பேர் கைது

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 19th June 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறுமுகையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பாஜக, மதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், 30 பெண்கள் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சிறுமுகை, தியேட்டர் மேடு பகுதியில் அரசு மதுபானக் கடை உள்ளது. இக்கடையை சுற்றிலும் பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், வாரச் சந்தை, கூட்டுறவு வங்கி உள்ளிட்டவை உள்ளன. இதனால், எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.

    அந்த மதுக்கடையில் பார் இல்லாததால் மது அருந்த வருவோர் மாலை நேரங்களில் சத்தி பிரதான சாலை மற்றும் பேரூராட்சி அலுவலக சாலையில், திறந்த வெளியில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி, மாணவியர் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது.

    இதனால், அந்த மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி பாஜக பேரூராட்சி கவுன்சிலர் சுவாமிநாதன் தலைமையில், புதன்கிழமை காலை மதுக்கடை முன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    இதில், பாஜக மாவட்ட பொதுச்செயலர் ஜெகநாதன், மேட்டுப்பாளையம் நகர்மன்றத் தலைவர் சதீஸ்குமார், மாவட்ட பாஜக விவசாய அணிச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, திமுக கவுன்சிலர் செந்தில், மதிமுக ஒன்றியச் செயலர் செல்வகுமார் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    தகவலறிந்து அங்கு வந்த மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, காவல் ஆய்வாளர் (பொறுப்பு) வீரபாண்டி, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்குள் கடையை மாற்ற அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் அதை ஏற்காத போராட்டக்காரர்கள், மதுக்கடையை உடனே இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அங்கிருந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 120 பேரைக் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai