சுடச்சுட

  

  கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.

  இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடந்த கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் க.லதா தலைமை வகித்தார். அவர் பேசியது:

  தற்போதைய சூழ்நிலையில் மழைநீர் சேகரிப்பு மிகவும் இன்றியமையாதது. தமிழகத்தின் தொழிற்கூடமாக விளங்கும் கோவையில் தொழிற்சாலை வளாகங்களில் அமைக்கப்படும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

  குறிப்பாக, தொழிற்சாலைகளில் அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துவதன் மூலம் அங்கு பணியாற்றும் பணியாளர்களும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்ந்து அவர்களது வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க தொழில் முனைவோர் ஊக்கப்படுத்த வேண்டும்.

  மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பெரிய குளங்களை மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தில் தூய்மைப்படுத்தி மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, அனைத்துக் குளங்களும் சீரமைக்கப்பட உள்ளன என்றார் ஆணையர்.

  சென்னையைச் சேர்ந்த மழை இல்லம் மைய இயக்குநர் சேகர் ராகவன் பேசியது: சென்னை மாநகரில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பரவலாக அமைக்கப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதுபோல் தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவையிலும் ஒருங்கிணைந்து சரியான முறையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவதால் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும் என்றார்.

  மகேந்திரா பம்ப்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் மகேந்திரா ராமதாஸ், துணை ஆணையர் சு.சிவராசு, மாநகர பொறியாளர் சுகுமார், கட்டுமான சங்க பொறியாளர் சுப்ரமணியன், சிறுதுளி மயில்சாமி மற்றும் வனிதா மோகன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  ராக் அமைப்பின் தலைவர் சாமிநாதன் வரவேற்றார். ரவீந்திரன் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai