Enable Javscript for better performance
பொது விநியோக திட்ட செயல்பாடு: அமைச்சர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கோவை மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் மற்றும் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு வியாழக்கிழமை நடத்தினார்.

    கூட்டத்தில் 2014-15 ஆம் ஆண்டிற்கான அனைத்து கடன்கள், அரசு திட்டங்கள் தொடர்பான குறியீடு மற்றும் எய்திய விவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக புதிய உறுப்பினர்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கப்பட்ட விவரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    அதேபோல, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் 50 சதவீத அளவிற்கு கணினியமயமாக்கப்பட்ட பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாநகராட்சியில் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் அமைப்பதற்கு ரூ.1 கோடி நிதி அனுமதிக்கப்பட்டது. இதுநாள் வரை ரூ.41.71 லட்சம் மதிப்புள்ள 207 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.இந்தப் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக காய்கறிகள் விற்பனையை மேலும் அதிகப்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    முதல்வர் உத்தரவின்படி, கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் நியாய விலைக் கடைகள் மூலம் 25 லட்சம் பேருக்கு விலையில்லா அரிசி மற்றும் இதர அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகின்றன.

    அதேபோல அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின்கீழ், குடும்ப அட்டை ஒன்றுக்கு 35 கிலோ வீதம் 50,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

    கோவை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 9 கூட்டுறவு மருந்தகங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த மருந்தகங்களில் வியாபாரத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் கூறினார்.

    மேலும் சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர். சாலையில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையிலும், அழகேசன் வீதியில் உள்ள நியாய விலைக் கடையிலும் நேரில் பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராமமூர்த்தி, சிந்தாமணி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண் இயக்குநர் இந்துமதி, தலைவர் சிங்கமுத்து உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai