சுடச்சுட

    

    மூன்று நூற்றாண்டுகளை கண்ட மூதாட்டி தாயம்மாள், வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

    கோவை பூமார்க்கெட் தெப்பக்குளம் வீதியைச் சேர்ந்தவர் தாயம்மாள் (117). இவர் கடந்த 1897-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது கணவர் சின்னப்ப செட்டியார், கடந்த 1979-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்தத் தம்பதியினருக்கு 7 ஆண்கள், 3 பெண் குழந்தைகள் பிறந்தன.

    இவர்களில் முதல் 3 பேரை தவிர, அனைவரும் உயிருடன் உள்ளனர். மூதாட்டி தாயம்மாள் 6 தலைமுறைகளை கண்டுள்ளார். இவரது குடும்பத்தில் மகன், மகள், பேரன், பேத்திகள், கொள்ளு பேரன்கள், கொள்ளு பேத்திகள் என மொத்தம் 186 பேர் உள்ளனர்.

    தாயம்மாளின் கணவர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவரது மறைவுக்கு பின்னர், அவரது வாரிசுகளும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மறைந்த தாயம்மாள், கடந்த 1960-ஆம் ஆண்டு பாஸ்போர்ட் பெற்று இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளார்.

    இந் நிலையில், கடந்த புதன்கிழமை சுயநினைவிழந்த தாயம்மாள் வயது முதிர்ச்சி காரணமாக தனது 117 வயதில் வெள்ளிக்கிழமை இயற்கை மரணம் எய்தினார்.

    இதுகுறித்து அவரது பேரன் நித்தியானந்தம் கூறியது:

    பாட்டி தாயம்மாள் உயிரிழக்கும் இரண்டு நாள்களுக்கு முன்பு வரை அனைத்து வேலைகளையும் அவரே செய்து வந்தார். அவருக்கு தேவையான உணவை அவரே சமைத்துக் கொள்வார். அவரது துணிகளை அவரே துவைத்து உடுத்திக் கொள்வார். தனக்கு தேவையான பணிகளை யாருடைய உதவியுமின்றி தானே மேற்கொண்டு வந்தார்.

    தனது வாழ்நாள் இறுதி வரை மருந்து, மாத்திரைகளை உட்கொண்டதில்லை. உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனைக்கு சென்றதில்லை.

    கோவை நகரில் முதன்முறையாக சாலை போடப்பட்டது, பேருந்து இயக்கியபோது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்து விவரிப்பார். ஆங்கிலேயர் காலம் முதல் தற்போது வரையிலான கோவை நகரின் வரலாறு, வளர்ச்சி குறித்து தங்களிடம் குறிப்பிடுவார்.

    கடந்த 2007 ஆம் ஆண்டு பாட்டியின் 110 ஆவது பிறந்த நாளை குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டாடினோம். 2014 மக்களவைத் தேர்தலை தவிர அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார் என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai