சுடச்சுட

  

  கட்டாஞ்சி மலையைக் குடைந்து புதிய புறவழிச்சாலை

  By மேட்டுப்பாளையம்  |   Published on : 26th June 2014 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தாயனூரிலிருந்து கட்டாஞ்சி மலை வழியே, கோவை சாலையிலுள்ள ஜோதிபுரம் வரை சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணி ரூ. 4 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.

  காரமடைக்கு மேற்கே அமைந்துள்ள தோலம்பாளையம், வெள்ளியங்காடு, தாயனூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கோவை செல்ல காரமடையை சுற்றிச் சென்று வரும் நிலை உள்ளது. இதனால் பண விரயமும், 12 கி.மீ. தூரம் அதிகமென்பதால் கால விரயமும் ஆகிறது.

  இதையடுத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை குறித்து, தொகுதி எம்எல்ஏ ஓ.கே. சின்னராஜ் தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுசென்றார். இதைத் தொடர்ந்து புறவழிச்சாலை திட்டத்திற்கு முதல்வர் ஒப்புதல் அளித்து, ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதற்கான சாலைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

  இப்பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், எம்எல்ஏ ஓ.கே. சின்னராஜ் ஆகியோர் திங்கள்கிழமை பார்வையிட்டனர். கட்டாஞ்சி மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சாலையில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்ட கல்லூரி பேருந்தில் பயணம் செய்து, தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.

  இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஞானசேகரன், காரமடை ஒன்றியத் தலைவர் ராஜ்குமார், மாநில வேளாண் திட்டக் குழு உறுப்பினர் துரைசாமி, ஊராட்சித் தலைவர்கள் பூபதி, வெள்ளியங்கிரி, லட்சுமிபிரியா, ஜீவானந்தம், ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  புதிய புறவழிச்சாலை அமைக்கப்படுவதால் 5 ஊராட்சிகளின் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் பெறுவர்.

  இந்த புதிய சாலையிலுள்ள கட்டாஞ்சி மலையில் புகழ் பெற்ற ஸ்ரீ தண்டிகை பெருமாள் கோயில் உள்ளது. புரட்டாசி மாதத்தில் நடைபெறும் இக்கோவில் விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி, கர்நாடக மாநில பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். இந்த மலைப்பாதையில் புதிய தார்ச் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கோவில் திருப்பணிக் குழுத் தலைவர் சுந்தரமூர்த்தி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai