கோவையில் விரைவில் மக்கள் ஆட்டோ துவக்கம்
By கோவை, | Published on : 26th June 2014 05:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சென்னையில் இயக்கப்படுவது போல கோவையிலும் ஒரு மாதத்திற்குள் கணினிமயமாக்கப்பட்ட (ஆன்லைன்) மக்கள் ஆட்டோ இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து, கோவையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மக்கள் ஆட்டோ பிரைவேட் நிறுவனத்தின் தலைவர் ஏ.மன்சூர் அலிகான் கூறியது:
தமிழக அரசு நிர்ணயித்தபடி (முதல் 1.8 கி.மீ.க்கு ரூ. 25, அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 12) சென்னையில் ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அக் கட்டண முறையுடன் கணினி மயமாக்கப்பட்ட 100 மக்கள் ஆட்டோக்கள் விரைவில் கோவையிலும் இயக்கப்பட உள்ளன.
இதற்காக சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து அதிநவீன கணினி மயமாக்கப்பட்ட மீட்டர் ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மீட்டரின் திரையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரியும். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள வசதியாக ஸ்பீக்கர் அமைப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பயணத்தின் இறுதியில் கட்டணத் தொகை பில்லாகவோ அல்லது பயணியின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும். பயணிகள் அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் மூலம் காண முடியும். பயண அலுப்பு தெரியாமல் இருக்க ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ள மீட்டரில் பொழுதுபோக்கு விடியோக்களை பார்த்துக் கொள்ளலாம்.
பயணியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கணினியில் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பயணத்தின்போது ஆட்டோ ஓட்டுநருக்கும் பயணிக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் தானாகவே பதிவாகி சர்வர் மூலம் கால் சென்டருக்குச் சென்றுவிடும்.
பயணிக்கு ஆபத்து நேரிடும்போது கணினியில் உள்ள அவரசகால பட்டனைத் தொடுவதன் மூலம் ஆட்டோவில் என்ன நடக்கிறது என்பதை கால் சென்டர்களில் உள்ளவர்கள் அறிந்துகொண்டு உதவ முடியும்.
ஆண்ட்ராய்டு செல்போனில் மக்கள் ஆட்டோ அப்பிளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொண்டால், வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு கி.மீ. சுற்றுத் தொலைவில் மக்கள் ஆட்டோ இருப்பது தெரியவரும். 24 மணி நேர சேவை என்பதால் எஸ்.எம்.எஸ். மூலமாக அல்லது 43214321 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.