Enable Javscript for better performance
விவசாயிகளின் நாடித்துடிப்பு நல்லாறு திட்டம்-என்.ஆர்.மகேஷ்குமார்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளின் நாடித்துடிப்பு நல்லாறு திட்டம்-என்.ஆர்.மகேஷ்குமார்

    By பொள்ளாச்சி  |   Published on : 26th June 2014 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக- கேரள மாநிலங்களிடையிலான நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தப்படி அப்பர் நீராறு அணையிலிருந்து ஆண்டிற்கு 9 டிஎம்சி தண்ணீரை நேரடியாக எடுத்துக்கொள்ள முழு உரிமை இருந்தும், தண்ணீரை நேரடியாக எடுக்காததால் 4 டிஎம்சி வரை தமிழகத்திற்கு நீர் இழப்பு ஏற்படுகிறது.

    இந்நிலையில், நல்லாறு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றினால் திருமூர்த்தி அணையில் இருந்து தடையில்லாமல் பாசனத்திற்கு தண்ணீர் வழங்க முடியும்.

    திட்டத்தின் தேவை:

    பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் (பி.ஏ.பி.) திட்டத்தில் மேல்நீராறு, கீழ் நீராறு அணை மூலமாகக் கிடைக்கும் தண்ணீர் சோலையாறு அணைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. சோலையாறு அணையில் இருந்து மானாம்பள்ளி மின்நிலையம் மற்றும் சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    அங்கிருந்து தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் வழியாக சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அதன்பின், காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கும், ஆழியாறு

    ஃபீடர் கால்வாய் வழியாக ஆழியாறு அணைக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    தண்ணீர் திருமூர்த்தி அணையை அடைய ஆகும் தூரம் 200 கி.மீ. ஆகும். மொத்தத்தில் இதில் 4 டிஎம்சி தண்ணீர் விரயம் ஏற்படுகிறது. காண்டூர் கால்வாயில் 30 சதவீதம் தண்ணீர் விரயம் இருப்பதாக பி.ஏ.பி. திட்டக் குழுத் தலைவர் தெரிவிக்கிறார்.காண்டூர் கால்வாயில் எதிர்பாராத பழுதுகள் ஏற்படும்போது, நீர்ப்போக்கு தடைபடுகிறது. இதுதவிர, பரம்பிக்குளத்தில் இருந்து தூணக்கடவு அணைக்கும், தூணக்கடவு அணையில் இருந்து சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையம் மூலமாக காண்டூர் கால்வாய்க்கும் சுரங்கக் கால்வாய்கள் (டனல்) மூலமாகவே தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தூணக்கடவு அணையில் இருந்து சர்கார்பதிக்கு அதிகபட்சமாக 1,000 கனஅடி மட்டுமே தண்ணீர் கொண்டுசெல்ல முடியும். மழை அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் டனல்கள் வழியாக 1,000 கனஅடி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு கொண்டு செல்லமுடியும். இதன்காரணமாக, பரம்பிக்குளம் அணை தனது கொள்ளளவான 17,820 கன அடி தண்ணீர் நிறைந்தவுடன், வேறு வழியின்றி சாலக்குடி ஆறு வழியாக கடலுக்குச் செல்கிறது. இப்படி தண்ணீர் அதிகமாகக் கிடைத்தாலும் சில நேரங்களில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    ரூ. 550 கோடி மதிப்பீடு:

    நல்லாறு அணை கட்டுவதற்கு 2014-15ஆம் ஆண்டிற்கான திட்ட மதிப்பீடாக ரூ. 550 கோடி செலவாகும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் உத்தேச மதிப்பீடு தயாரித்து காவிரி தொழில்நுட்ப ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும், நல்லாறு அணைத் திட்டம் மூலமாக தலா 125 மெ.வா. திறன் கொண்ட இரு மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து 250 மெ.வா. மின் உற்பத்தி செய்ய முடியும்.

    நல்லாறு அணை கட்டுவதன் மூலமாக, மேல்நீராறு தண்ணீரை நல்லாறு அணைக்கு நேரடியாகக் கொண்டுசெல்ல முடியும். மேலும், நல்லாறு அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீரைக் கொண்டு வரலாம். இதனால் தண்ணீரைக் கொண்டு வருவதில் ஏற்படும் காலதாமதமும், நீர் விரயமும் தவிர்க்கப்படும்.

    நல்லாறு அணைக்கு நீர் வரும் பாதையில் 14.40 கி.மீ. தூரத்துக்கு டனல் அமைத்தால் தண்ணீர் நல்லாற்றில் வந்து சேர்ந்துவிடும். தண்ணீர் வந்துசேரும் இடத்தில் நல்லாற்றில் சிறிய அணை கட்டி, அதிலிருந்து தண்ணீரை நேரடியாக திருமூர்த்தி அணைக்குக் கொண்டு சேர்க்கமுடியும்.

    இத்திட்டத்தில் 9.00 டிஎம்சி தண்ணீரைப் பெறுவதுடன் மின்சார உற்பத்தியும் செய்ய முடியும் என்கின்றனர் பி.ஏ.பி. விவசாயிகள் மற்றும் சில அதிகாரிகள்.

    இழப்பு கேரளத்திற்கும் தான்:

    பி.ஏ.பி. திட்டத்தில் பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகள் விஷயத்தில் கேரளம் குழப்பத்தை ஏற்படுத்தினால், அதில் கண்டிப்பாக அவர்களுக்கே அதிக இழப்பு ஏற்படும்.பி.ஏ.பி. திட்டத்தில் கேரள சோலையாறு அணை வழியாகவோ, பரம்பிக்குளம் அணை வழியாகவோ விவசாயத்திற்கோ, குடிநீருக்கோ கேரள அரசு தண்ணீரை பயன்படுத்துவதில்லை.

    தமிழகத்தில் இருந்து ஆழியாறு - மணக்கடவு அணைகள் வழியாக கேரளத்தில் உள்ள மூலத்தரா அணைக்கு வழங்கும் 7.25 டிஎம்சி தண்ணீர் மூலமே 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கேரள மாநிலம், சித்தூர் தாலுகாவில் பாசன வசதி பெறுவதுடன், பாலக்காடு மாவட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு குடிநீரும் கிடைத்து வருகிறது.

    கேரள அரசும், அரசியல் கட்சியினரும் இத்திட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள் பற்றியும், நதிநீர்ப் பங்கீடு பற்றியும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் குழப்பம் ஏற்படுத்தி, இருமாநில விவசாயிகளின் நல்லுறவில் விரிசல் ஏற்படுத்தினால், அதனால் கண்டிப்பாக இழப்பு கேரளத்திற்குத் தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

    (தொடரும்)

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai