சுடச்சுட

    

    கோவை மத்திய சிறை குறித்து மாநில உள்துறை அமைச்சகத்திடம் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், அங்கு நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மத்திய சிறைக்குள் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதாக எழுந்த புகாரையடுத்து, சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் ஓர் அறிக்கையை சிபிசிஐடி போலீஸார் மாநில உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.

    அதில், கோவை மத்திய சிறையில் உள்ள சிறைக்கைதிகளுக்கு கடந்த பல மாதங்களாக தரமற்ற உணவுப் பொருள்கள் வழங்கியதாகவும், தனியாக உணவுக்கூடம் நடத்தி சில தீவிரவாதக் கைதிகளுடன் கைகோர்த்து சிறைத்துறை அதிகாரிகள் பணம் ஈட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்தடுக்கு பாதுகாப்பு கொண்ட கோவை மத்திய சிறைக்குள், கட்டுக்காவலை மீறி செல்போன், சிம்கார்டு, கஞ்சா, பீடி, சிகரெட் போன்றவை சட்டவிரோதமாகக் கொண்டுசெல்லப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அரசு வழிகாட்டுதலின் படி கூட்டுறவு சங்கத்தில் வாங்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் கட்டண ரசீதையும் சிறைத்துறை அதிகாரிகள் சமர்ப்பித்த கட்டண ரசீதையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் பெருமளவில் பண மோசடி நடைபெற்றிருப்பதற்கு முகாந்திரம் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    தவிர, முறைகேட்டில் ஈடுபட்ட 17 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் இந்தப் புகார்களை தற்போதுள்ள கோவை மத்திய சிறைத்துறை அதிகாரிகள் முற்றிலுமாக மறுக்கின்றனர். தற்போது இதுபோன்ற முறைகேடுகள் சிறையில் நடப்பதில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கோவை மண்டல சிறைத்துறை டிஐஜி கோவிந்தராஜின் பதவிக்காலம் நிறைவுறும் நிலையில் இந்தப் புகார்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai