சுடச்சுட

    

    சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    கோவை மாவட்ட நிர்வாகம், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ், கல்வித்துறையினர், மருத்துவத் துறை தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து செயல்படுத்திய விழிப்புணர்வுப் பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்கி வைத்தார். மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், துணை ஆணையர் (கலால்) து.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்துஸ்தான் கலைக் கல்லூரி, கிருஷ்ணம்மாள் கலைக் கல்லூரி, அரசினர் கலைக் கல்லூரி, அவினாசிலிங்கம் கலைக்கல்லூரி, சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 600-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர்.

    பேரணியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் போதைப் பொருள் விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

    இந்தப் பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, காவல் ஆணையர் அலுவலகம், டிஎஸ்பி சிக்னல் வழியாக காவல் சமுதாயக் கூடத்தை அடைந்தது.

    கற்பகம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவத் துறை- இருதய சிகிச்சை துறை தலைவர் டாக்டர் எம்.சிவபாலன், போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து உரையாற்றினார்.

    மற்றொரு பேரணி: கோவையில் உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

    கிணத்துக்கடவு, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி, கோவை மாநகராட்சிப் பள்ளி, அபிராமி மருத்துவமனை ஆகியவை இணைந்து இப்பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

    காவல்துறை ஆய்வாளர் தெய்வசிகாமணி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். காந்திபுரத்தில் துவங்கிய இப்பேரணி வ.உ.சி. பூங்காவில் நிறைவடைந்தது.

    பேரணிக்கு ஈஸ்வர் கல்லூரியின் கணினியியல் துறைத் தலைவர் என்.சரவணசெல்வம் தலைமை தாங்கினார். அபிராமி மருத்துவமனை மருத்துவர்கள் பேரணியில் பங்கேற்றனர். ஈஸ்வர் கல்லூரி இயக்குநர் ராஜாராம், முதல்வர் சுதா மோகன்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai