Enable Javscript for better performance
வீணாகும் தண்ணீரை என்ன செய்கிறது கேரளம்?-என்.ஆர்.மகேஷ்குமார்- Dinamani

சுடச்சுட

  

  வீணாகும் தண்ணீரை என்ன செய்கிறது கேரளம்?-என்.ஆர்.மகேஷ்குமார்

  By பொள்ளாச்சி  |   Published on : 27th June 2014 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பி.ஏ.பி. திட்டத்தில் பயன்படுத்தாமல் விரயமாகும் தண்ணீரை கேரள மாநிலமாவது பயன்படுத்துகிறதா என்றால் இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கிறது. எனவே பி.ஏ.பி. திட்டத்தில் நிறைவேற்றப்படாத பகுதிகளை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முயற்சிப்பது அவசியமாகும்.

  யாருக்கும் பயனில்லை:

  இடைமலையாற்றில் மின் உற்பத்தி நிலையம் அமைத்து வெளியேறும் தண்ணீரை கேரளம் சிறிதளவே விவசாயத்திற்குப் பயன்படுத்துகிறது. அதன்பிறகு பெரும்பாலான நீர் கடலில் கலக்கிறது.

  தமிழக சோலையாறில் இருந்து பெறும் தண்ணீரைக் கொண்டு, கேரள சோலையாறு மூலமாக மின் உற்பத்தி செய்துவிட்டு, கடலில் கலக்கவிடப்படுகிறது. பரம்பிக்குளம் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரும், சாலக்குடி ஆறு வழியாக கடலில் தான் கலக்கிறது.

  ஆழியாறு அணையில் இருந்து பெறும் தண்ணீரை மட்டுமே கேரள அரசு குறைந்த அளவு விவசாயத்திற்குப் பயன்படுத்துகிறது. இவ்வாறு கேரளம் தண்ணீரை வீணாக்கும் நிலையில், தமிழகத்தின் உரிமையை தட்டிப் பறிக்க நினைக்கிறது.

  பி.ஏ.பி. திட்ட ஒப்பந்தத்தின்படி, தமிழகத்தில் இருந்து ஆழியாறு - மணக்கடவு அணைகள் வழியாக கேரளத்திற்கு 7.25 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் இருமாநில எல்லையில், கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மூலத்தரா அணைக்கு செல்கிறது.

  அங்கு செல்லும் தண்ணீரை வலது, இடது கால்வாய்கள் மூலமாக நெல் சாகுபடிக்கு கேரள அரசு பயன்படுத்துவதே இதன் நோக்கம். ஆனால் கேரள அரசு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உடைந்த மூலத்தரா அணையை இதுவரை சரிசெய்யாமலும், புதுப்பிக்காமலும் வைத்துள்ளது.

  இதனால் கால்வாய்களில் முழுமையாக தண்ணீர் கொண்டுசெல்ல முடியாமல் கடைமடை விவசாயிகள் பாதிப்படைந்துவருகின்றனர். எனவே, 25 ஆயிரம் ஏக்கர் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டு தற்போது, சில நூறு ஏக்கரில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

  மழைக் காலங்களிலும், மற்ற நாள்களிலும் தமிழகத்தில் இருந்து வழங்கப்படும் தண்ணீரானது மூலத்தரா அணை பயன்பாட்டில் இல்லாததால், பாசனத்திற்குப் பயன்படுத்த முடியாமல் பாரதப்புழா ஆற்றின் வழியாக அரபிக்கடலைச் சென்றடைகிறது.

  இப்படி, கிடைக்கும் நீரைச் சேமிக்க அணையைப் பராமரித்து பாசன வசதி செய்யாமல், தமிழகத்துடன் அம்மாநில அரசியல்வாதிகள் வீண் பிரச்னை செய்துவருகின்றனர். இதுபற்றி கேரள மக்கள் சிந்திக்க வேண்டும்.

  உரிமை நிலைநாட்டப்படுமா?

  காவிரி பிரச்னை, சிறுவாணி பிரச்னை போன்றவை தண்ணீர் பெறுவதில் மற்ற மாநிலங்களை நம்பி இருப்பவை. அவ்வாறில்லாமல் பி.ஏ.பி. திட்டம் முழுவதும் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளது. இந்தத் திட்டத்திலும் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருப்பது தமிழகத்தின் அலட்சியம் என்றே கூறலாம்.

  பி.ஏ.பி. திட்டத்தின் பல பகுதிகளில் தமிழகத்தின் நீர்ப் பகிர்மான உரிமையை 56 ஆண்டுகாலமாக தமிழகம் இழந்துவருகிறது என்பதை இதுவரை கண்டோம். இதைச் சரிப்படுத்தினாலே இரு மாநில மக்களும் பயன்பெற முடியும்.ஒவ்வொரு முறையும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் ஆட்சிக்கு வந்தால், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர்; தொகுதி எம்எல்ஏ, எம்.பி.க்களும் உறுதி அளிக்கின்றனர். ஆனால், 56 ஆண்டுகளாக திட்டங்கள் வெறும் வார்த்தைகளாகவே தொடர்கின்றன.

  கடந்த மக்களவைத் தேர்தலின்போது, தேர்தல் வாக்குறுதியாக இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாவும் தெரிவித்தார். பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் இதனை முதல்வர் அறிவித்தார்.

  எனவே, தமிழக அரசு இத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  இதுகுறித்து, பி.ஏ.பி. விவசாய சங்கத் தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறியது:தற்போது பி.ஏ.பி. திட்டத்தில் சில பகுதிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறையும், சில பகுதிகள் இரண்டு ஆண்டிற்கு ஒரு முறையும் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனைமலையாறு - நல்லாறு திட்டங்களை நிறைவேற்றினால், ஆண்டு முழுவதும் தண்ணீர் வழங்க முடியும்.

  தமிழக அரசு இத்திட்டங்களை நிறைவேற்றினால், பி.ஏ.பி. விவசாயிகளின் முழு ஆதரவும் தமிழக அரசுக்கு கிடைப்பதுடன், 56 ஆண்டுகளாக கிடைக்காத உரிமையை மீட்டெடுத்த பெருமையும் தற்போதைய அரசுக்கு கிடைக்கும் என்றார்.நதிநீருக்காக வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடும் நேரத்தில், திட்ட ஒப்பந்தப்படி ஏற்கனவே நமக்கு உரிமையுள்ள தண்ணீரைப் பெறுவதற்கான முயற்சிகளில் தமிழகம் ஈடுபட வேண்டும்.

  கேரளமும், கடலில் வீணாகும் தண்ணீரைக் கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு இத்தட்டத்தை முழுமையாக நிறைவேற்ற ஒத்துழைப்பு நல்க வேண்டும். அதன்மூலமாக அம்மாநிலமும் நன்மை பெற முடியும். மனமிருந்தால் மார்க்கமுண்டு. (தொடரும்)

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai