சுடச்சுட

    

    சகோதர உணர்வை கேரளம் புண்படுத்தக் கூடாது-என்.ஆர்.மகேஷ்குமார்-

    By பொள்ளாச்சி  |   Published on : 28th June 2014 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் கேரள அரசியல் கட்சிகள் பிரச்னையைக் கிளப்பி கேரள மக்கள் மீது தமிழர்கள் வைத்துள்ள சகோதரத்துவ உணர்வை புண்படுத்த வேண்டாம் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம் (பி.ஏ.பி.) கேரள அரசின் ஒப்புதலுடனும், ஒத்துழைப்புடனும் நிறைவேற்றப்பட்ட திட்டம். இதில், தற்போது வரை கேரள அரசுக்கு தமிழகம் நீர்ப் பகிர்மான ஒப்பந்தப்படி தண்ணீரை வழங்கிவருகிறது.

    கேரள அரசும், விவசாயிகளும், மக்களும் பிஏபி திட்டம் பற்றி கடந்த ஆண்டு வரை எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தியதில்லை. ஆனால், தற்போது கேரள அரசியல் கட்சியினர், பிஏ.பி. அணைகள் கேரளத்துக்கு சொந்தம் என்று கூறி பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

    தமிழக விவசாயிகளுக்கு ஒப்பந்தப்படி முழு அளவில் தண்ணீர் கிடைக்காவிட்டாலும், இதுவரை விவசாயிகள் கேரளத்துக்கு வழங்கிவரும் தண்ணீரைக் குறைக்குமாறு கோரிக்கை வைத்ததில்லை. தமிழக அதிகாரிகளும் கேரளத்திற்கு தண்ணீர் வழங்குவதில் பாரபட்சம் காட்டியதில்லை.

    தமிழக விவசாயிகளும் அதிகாரிகளும், கேரள விவசாயிகளையும் மக்களையும் சகோதரத்துவத்துடன் மட்டுமே பார்த்துவந்துள்ளனர். ஆனால், கேரள அரசியல் கட்சியினர் தற்போது, குறுகிய லாபங்களுக்காக தமிழக விவசாயிகளின் சகோதர உணர்வைப் புண்படுத்திவருகின்றனர்.

    தமிழக அதிகாரிகள் நீர்ப் பங்கீட்டில் காட்டிய நேர்மைக்குப் பரிசாக தற்போது, கேரள அரசியல் கட்சியினர் குழப்பம் விளைவிக்கின்றனர். இதுகுறித்த தமிழக விவசாயிகளின் கருத்துகளின் தொகுப்பு இது...

    தென்னிந்திய தென்னை சாகுபடியாளர் சங்கத் தலைவர் தாத்தூர் கிருஷ்ணசாமி கூறியதாவது:

    பி.ஏ.பி. திட்டம் பற்றி கேரளம் புரிந்துகொள்ள வேண்டும். பி.ஏ.பி. திட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த வி.கே. பழனிசாமி கவுண்டர். அவர் தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் மேல்சபை துணை சபாநாயகராக இருந்தபோது, பரம்பிக்குளம் அணை கட்டுமாறு கோரிக்கை விடுத்தார். பி.ஏ.பி. திட்டம் உருவாகவும் முக்கிய ஆலோசனை வழங்கினார். அதற்குப் பிறகே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.

    காமராஜர் ஆட்சிக் காலத்தில், அப்போதைய பாரதப் பிரதமர் ஜவாகர்லால் நேருவால் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டன. இந்தத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றாமல் இருந்திருந்தால், இன்று கேரள மாநிலமும் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கும்.

    பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளையும் கட்டியது தமிழகம் தான். தற்போது வரை இவற்றின் பராமரிப்பையும் நீர்ப் பகிர்மானத்தையும் தமிழகம் தான் செய்துவருகிறது.

    கேரளத்தினரிடம் தமிழக மக்களும் விவசாயிகளும் சகோதரத்துவத்துடனேயே பழகிவருகின்றனர். கேரள அரசியல் கட்சிகள் பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள் விஷயத்தில் பிரச்னையை ஏற்படுத்தி, இந்த சகோதரத்துவத்தில் விரிசல் ஏற்படுத்திவிடக் கூடாது என்றார்.

    ஆழியாறு பாசன திட்டக்குழுத் தலைவர் ஏ.கே.சின்னசாமி கூறுகையில், ""பி.ஏ.பி. திட்ட ஒப்பந்தத்தில் அணைகள் பற்றியும், பராமரிப்பு பற்றியும் தமிழகத்திற்கு உள்ள உரிமை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர்ப் பகிர்மான ஒப்பந்தப்படி கேரளத்திற்கு முழுமையான தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கேரளத்தினர் தேவையில்லாமல் பிரச்னை செய்துவருகின்றனர். இதனால், கேரளத்துடன் தமிழகத்தின் நல்லுறவு பாதிக்கப்படும்'' என்றார்.

    திருமூர்த்தி அணைப் பாசன விவசாயி ஆறுசாமி கூறுகையில், ""பி.ஏ.பி. திட்டத்தில் நீர்ப் பகிர்மான ஒப்பந்தப்படி கேரளத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அணைகள் விஷயத்தில் கேரளக் கட்சிகளும், அரசும் தேவையற்ற பிரச்னையை ஏற்படுத்தி சகோதர உணர்வைப் புண்படுத்தி வருகின்றன. தேவையற்ற பிரச்னைகளை கேரளம் தவிர்க்க வேண்டும்'' என்றார்.

    கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் ஆழியாறு பாசன விவசாயியுமான ஆர்.ஏ.சக்திவேல் கூறுகையில், ""பி.ஏ.பி. திட்டத்தில் பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள் விஷயத்தில் திட்டத்தின் ஒப்பந்தத்தை கேரளத்தினர் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். கேரளத்தினருக்கு நீர்ப் பகிர்மானப்படி தண்ணீர் முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது'' என்றார்.

    நல்லதை நாடுவோம்:

    மழைக்காலத்தில் கடலில் பெருமளவு கலக்கும் நீரால் யாருக்கும் லாபமில்லை. அதற்காக உருவாக்கப்பட்டவை தான் பி.ஏ.பி. திட்ட அணைகள். நதிகளை இணைப்பது குறித்து தேசிய அளவில் தற்போது விவாதம் துவங்கியிருக்கும் நிலையில், இதனை 50 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழக, கேரள மாநில அரசுகள் தங்கள் ஒத்துழைப்பால் சாத்தியமாக்கி இருக்கின்றன.

    ஆக்கப்பூர்வ சிந்தனையே இருமாநிலங்களின் வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதற்கான நிரூபிக்கப்பட்ட உதாரணம் பி.ஏ.பி. திட்டம். இதனை மேலும் மேம்படுத்தவே இரு மாநில அரசுகளும் முயற்சிக்க வேண்டும்.

    குறுகியகால அரசியல் லாபங்களுக்காக மக்களை தவறாக வழிநடத்தி, நல்லதொரு திட்டத்தை கேரளம் வீணாக்கிவிடக் கூடாது. இதுவே தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

    (நிறைவு)

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai