சுடச்சுட

    

    "விற்பனை'க்கு வரும் கயிறு வாரிய உறுப்பினர் பதவி: மாற்றம் கொண்டு வருமா மத்திய அரசு?-ஆர்.வேல்முருகன்-

    By கோவை  |   Published on : 28th June 2014 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழிலை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கயிறு வாரியத்தில் உறுப்பினர்கள் பதவி "விற்பனை'க்கு வந்துள்ளது, தென்னைப் பொருள் ஏற்றுமதியாளர்களிடம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேரள மாநிலத்திலும் தமிழகத்திலும் அதிக அளவு தென்னை மரங்கள் உள்ளன. தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பாகங்களும் முழுமையாகப் பயனாகின்றன. தேங்காய், இளநீர் போக தென்னை மட்டையைப் பிரிக்கும்போது கிடைக்கும் நார், நார்க்கழிவுத் துகள் ஆகியவை நேரடியாகவும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றியும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    கடந்த 2012-13 நிதியாண்டில் தென்னை சார்ந்த பொருள்கள் ரூ. 1,116 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது; 2013-14 நிதியாண்டில் ரூ. 1,476 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

    நாடு முழுவதும் தென்னை அதிகம் விளையும் பகுதிகளில் தென்னை சார்ந்த பொருள் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் ஊக்கப்படுத்துவதற்காக கயிறு வாரியம் அமைக்கப்பட்டது. கயிறு வாரியத்தை நிர்வகிக்க தலைவர், துணைத் தலைவர், செயலர் பதவிகளும் மண்டல அலுவலகங்களும் ஏற்படுத்தப்பட்டன.

    மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் (எம்.எஸ்.எம்.இ.) கீழ் கயிறு வாரியம் வருகிறது. கயிறு வாரியத்தில் மொத்தம் சுமார் 40 உறுப்பினர்கள் வரை நியமிக்கப்படுகின்றனர்.

    மத்திய எம்.எஸ்.எம்.இ.யின் இணைச் செயலர், கூடுதல் செயலர் மற்றும் நிதி ஆலோசகர், கேரள அரசின் கயிறுத்துறை சிறப்புச் செயலர், தமிழக அரசின் தொழில்துறை ஆணையாó, அசாம் மாநில தொழில்துறை ஆணையர், ஒடிசா மாநில எம்.எஸ்.எம்.இ. செயலர், மகாராஷ்டிர தொழில்துறை செயலர் உள்ளிட்டோர் இதில் உறுப்பினர்கள். இதுதவிர தென்னை அதிகம் விளையும் மாநிலங்களில் இருந்து சம்பந்தப்பட்ட மாநில அரசு பரிந்துரைக்கும் நபர்கள், இதில் உறுப்பினராகலாம். நியமிக்கப்படும் கயிறு வாரியக் குழுவினர் 3 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிக்கலாம்.

    பிரதிநிதித்துவம் இல்லை: தமிழகத்தைப் பொருத்தவரை கயிறு வாரியத்தின் மண்டல அலுவலகம் பொள்ளாச்சியில் அமைந்ததில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை உணர முடியும். பொள்ளாச்சியில் இருந்து மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ. 700 கோடிக்கு மேல் தென்னை சார்ந்த பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    ஆனால் பொள்ளாச்சி நகரின் ஏற்றுமதிக்கு ஏற்ப உரிய உறுப்பினர்கள் கயிறு வாரியத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சியைச் சேர்ந்த சி.கே.காமராஜ் என்பவர் மட்டும் கயிறு வாரியத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்தார். ஆனால் அவருடைய காலத்திலும் பொள்ளாச்சிக்கென குறிப்பிடும்படி எதுவும் செய்யவில்லை.

    ஏற்றுமதியில் சிறந்த நகரம் அந்தஸ்தை மத்திய அரசு தர வேண்டுமானால், பொள்ளாச்சி பகுதியில் இருந்து பல உறுப்பினர்கள் கயிறு வாரியத்தில் உறுப்பினராக வேண்டும். அப்போது தான் மத்திய அரசிடம் போராடியாவது இதைப் பெற முடியும்.

    விற்பனைக்கு வரும் பதவி: கயிறு வாரியத்தில் உறுப்பினரானால் 3 ஆண்டுகளுக்கு நல்ல வசதிகளை அனுபவித்துக் கொள்ளலாம் என்பதால் இப்பதவி விற்பனைக்கு வருவதாகக் கூறப்படுவது உற்பத்தியாளர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பதவிக்கு சில லட்சங்கள் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    தென்னை சார்ந்த தொழில்கள் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளித்து தொழிலில் இருப்பவர்களை உறுப்பினர்களாக்கினால் அந்தந்தப் பகுதியில் தென்னை சார்ந்த தொழில்கள் மேலும் வளர்ச்சி பெறும். அதற்குப் பதிலாக பதவியை விலைக்கு வாங்குபவர்களை உறுப்பினர்களாக்கினால் அதனை எப்படி ஏற்றுக் கொள்வது என்று கொந்தளிக்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

    மத்தியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கயிறு வாரிய உறுப்பினர்கள் பதவிக்கு அந்தத் தொழிலில் உள்ளவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

    தென்னை சார்ந்த தொழிலில் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை ஈடுபட்டவர்களை மட்டும் பரிந்துரைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட வேண்டும். அப்போது தான் கயிறு வாரியம் மேலும் சிறப்பாகச் செயல்படும் என்பது தென்னைப் பொருள் உற்பத்தியாளர்களின் கருத்து.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai