சுடச்சுட

    

    முதல்வர் அறிவித்த உக்கடம் மேம்பாலம் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

    கோவை, குனியமுத்தூரில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் க.கற்பகம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 684 பயனாளிகளுக்கு ரூ. 67.43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அமைச்சர் பேசியதாவது:

    கோவை மாவட்ட அளவில் அலுவலர் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அதன்மூலம் புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 3,700 நபர்களுக்கு குடும்ப அட்டைகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.

    மேலும், தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்படுகின்றன. மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் அறிவித்த உக்கடம் மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலம், மேற்கு புறவழிச் சாலை உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும்.

    மக்களின் சிரமத்தைப் போக்கி போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் வகையில் குறிச்சி குளத்தின் நீர்ப்பிடிப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தாற்காலிகமாக பணிகள் செய்யப்படுகின்றன. உக்கடம் மேம்பாலம் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டமாகும். அது கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

    இந்த விழாவில் 29 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா, 586 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை, 10 நபர்களுக்கு தையல் இயந்திரம், 10 நபர்களுக்கு சலவைப் பெட்டி, சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 49 நபர்களுக்கு நிதியுதவி என மொத்தம் 684 நபர்களுக்கு ரூ. 67.43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

    மாநகராட்சி மேயர் (பொறுப்பு) எஸ்.லீலாவதி உண்ணி, தெற்கு மண்டலக் குழுத் தலைவர் பெருமாள்சாமி, கோவை கோட்டாட்சியர் எஸ்.குணசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சிதம்பரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சி.ஏ.ஜாபர்அலி, வட்டாட்சியர் காந்திமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai