சுடச்சுட

    

    சிறைத்துறை டிஐஜி கோவிந்தராஜன் நீக்கத்தால் சர்ச்சை-பெ.ஸ்ரீநிவாசன்-

    By கோவை  |   Published on : 29th June 2014 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மண்டல சிறைத்துறை டிஐஜி கோவிந்தராஜன் பணி ஓய்வு பெறும் நிலையில் திடீரென சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

    கடந்த 2012ஆம் ஆண்டு சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்த ஒரு அறிக்கையின் அடிப்படையில் தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த அறிக்கையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள பிற அதிகாரிகள் மீது ஏன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    பணியிடை நீக்கம்: கோவை மண்டல சிறைத்துறை டிஐஜியாக இருந்தவர் கோவிந்தராஜன். இவர் திங்கள்கிழமை (ஜூன் 30ஆம் தேதி) பணி நிறைவு பெற இருந்த நிலையில் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இரு தினங்களுக்கு முன் ஊடகங்களில் கசிந்த சிபிசிஐடி அறிக்கையே இதற்கு மூல காரணமாக இருந்துள்ளது.கோவை சரக சிபிசிஐடி போலீஸார் மூலமாக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான சிறை நடவடிக்கைகளை விசாரித்து தயாரித்த அந்த அறிக்கையில், கோவை மத்திய சிறையில் உள்ள சிறைக் கைதிகளுக்கு உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்யாவசிய பொருள்கள் வாங்கியதில் பெருமளவில் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேலும் சிறைக்குள் தனி பிளாக்குகளில் அடைக்கப்பட்டுள்ள அல்-உம்மா இயக்கத்தினரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம் பெற்றுக்கொண்டு செல்போன் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்க சிறை அதிகாரிகள் வழிவகை செய்துள்ளனர்.

    அல்-உம்மா இயக்கத்தினருக்குத் தேவையான பெருமளவு வெளி உதவிகள் துரைசாமி என்ற ஒப்பந்ததாரர் மூலமாகக் கிடைத்துள்ளன என்றும், இதில் கோவை மத்திய சிறையில் பல்வேறு பதவிகளில் இருந்த அதிகாரிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மற்றவர்கள் மீது நடவடிக்கை இல்லையா?: அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல நாள்களாகியும் முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் மீது பெரிய அளவில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் ஊடகங்கள் வாயிலாக இந்தத் தகவல் கசியவே தற்போது கோவிந்தராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிந்தராஜன் பணி ஓய்வு பெறும் தறுவாயில் எவ்வாறு இந்த அறிக்கை எவ்வாறு வெளியானது என்பதே பலரது கேள்வியாக உள்ளது.

    தவிர, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பலநாள்களாகியும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தெரியவில்லை. கோவிந்தராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தருணத்தில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அறிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ள பலர் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் உயர் பதவிகளில் உள்ளதாகவும், இதன் காரணமாகவே சிறைத்துறை தலைமை யோசிப்பதாகவும் கூறினர். ஆனால் விஷயம் தற்போது அம்பலமாகிவிட்டதால் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி திரிபாதியிடம் கேட்டபோது, துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

    பணியிடை நீக்கத்தை எதிர்த்து வழக்கு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஐஜி கோவிந்தராஜனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ""நேர்மையாக பணியாற்றிய ஓர் அரசுப் பணியாளன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நீதி வெற்றி பெறும்'' என்றார்.

    மேலும் பணியிடை நீக்கத்தை எதிர்த்து கோவிந்தராஜன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து கோவை மத்திய சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவிந்தராஜன் மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் புகார்கள் இருந்தபோதும், தற்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட மேலிட அரசியல் விவகாரங்களே முக்கிய காரணம் என்றார்.

    மிரட்டப்படும் அதிகாரிகள்: கோவை மத்திய சிறை தமிழகத்தின் அதிக பதற்றம் நிறைந்த சிறைகளில் ஒன்று. தொடர் புகார்கள் காரணமாகவே கோவை சிறை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    சிபிசிஐடி போலீஸார் 2012-இல் அறிக்கை தாக்கல் செய்த பிறகு சிறைக்குள் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டதா என்றால் இல்லை என்பதே பதில். அதற்கு, சிறைக்குள் தொடர்ந்து கைப்பற்றப்படும் செல்போன்களே சாட்சி.

    கடந்த ஆண்டு கோவை மாநகர போலீஸார் சிறைக்குள் நடத்திய திடீர்ச் சோதனையில் செல்போன், லேப்டாப், கத்தி, இரும்புக் கம்பிகள், மிளகாய்ப் பொடி, பிளேடு உள்ளிட்ட 18 வகையான பொருள்கள் கைதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களின் கொலைகள் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த சதித் திட்டங்களில் கோவை மத்திய சிறைக்கு முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    தவிர கோவை மத்திய சிறைக்குள் நேர்மையாகப் பணிபுரியும் அதிகாரிகள் கூட தடை செய்யப்பட்ட இயக்கங்களின் மிரட்டல்களுக்கு உள்ளாவதால் பிரச்னை இல்லாமல் காலம் கழித்துவிட்டு வேறு ஊர்களுக்குச் செல்லவே விரும்புவதாகவும் சிறைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    சிறைகளில் நிகழும் குற்றங்களைக் களைய, முறைகேடுகளில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கோவை மத்திய சிறை போன்ற முக்கிய சிறைகளில் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது அவசியம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai