சுடச்சுட

    

    ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துமாறு மதிமுக கோரிக்கை

    By கோவை  |   Published on : 29th June 2014 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னைக்கு அடுத்தபடியாக ரயில்வேக்கு வருவாய் ஈட்டித் தரும் கோவை ரயில் நிலையத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சருக்கு மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக மதிமுகவின் கோவை மாநகர் மாவட்டச் செயலர் ஆர்.ஆர்.மோகன்குமார், ரயில்வே அமைச்சருக்கு எழுதிய கடித விவரம்:

    தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக ரயில்வேக்கு கோவை ரயில் நிலையம் வருவாய் ஈட்டித் தருகிறது. ஆனால் இங்கு பயணிகளுக்கு மிகக் குறைந்த வசதிகளே உள்ளன. எனவே பெரிய நகரங்களில் உள்ளது போல கோவை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

    பெங்களூரைப் போல கோவையிலும் தொழிற்சாலைகள், வேளாண்மை, உயர்ரக மருத்துவ வசதிகள், பள்ளி மற்றும் கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும் கோவை விளங்குகிறது. ஆனால் இன்று வரை பெங்களூருக்கு நேரடியாக ரயில் வசதி கோவையில் இருந்து கிடையாது. எனவே, கோவையில் இருந்து பெங்களூருக்கு புதிதாக இரவு நேர ரயில் வசதி செய்ய வேண்டும். அதேபோல பெங்களூரில் இருந்தும் கோவைக்கு ரயில் வசதி செய்து தர வேண்டும்.

    கோவையில் இருந்து சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இரவு நேரத்தில் உள்ளன. இந்த ரயில்களில் காத்திருப்போர் பட்டியலில் காணப்படும் நீண்ட வரிசையால் சென்னை செல்வது கனவாகவே உள்ளது. எனவே, இரு புறங்களிலும் கூடுதலாக இரவு நேர ரயில்களை விட வேண்டும்.

    கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக போத்தனூர், பொள்ளாச்சி, திண்டுக்கல் வழித்தடத்தில் அகல ரயில்பாதைப் பணிகள் மிகவும் தாமதமாக நடந்து வருகின்றன. அகல ரயில்பாதைப் பணிகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்கி விரைவில் இப்பணிகளை முடிக்க வேண்டும்.

    கோவில் நகரான ராமேஸ்வரத்துக்கு கோவையில் இருந்தும், ராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கும் புதிதாக இரவு ரயில் விட வேண்டும். கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் ராமநாதபுரம் வழியாக இந்த ரயிலை இயக்க வேண்டும்.

    கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் கோவை, நீலகிரி மாவட்டங்களில் வசிக்கின்றனர். கோவையில் இருந்து வியாபாரத்துக்காக கேரளத்துக்கு அதிகமானோர் செல்கின்றனர். இதைக் கருத்தில்கொண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கும் திருவனந்தபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கும் இரவு ரயில் விட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வரும் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai