Enable Javscript for better performance
பல்லுயிர் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    பல்லுயிர் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க வேண்டும்

    By கோவை,  |   Published on : 30th June 2014 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்லுயிர் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் நிபுணர் குழு முன்னாள் தலைவர் மாதவ் காட்கில் வலியுறுத்தினார்.

    மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில், "மேற்கு தொடர்ச்சி மலையைக் காப்போம்' என்ற தலைப்பில் கோவையில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாதவ் காட்கில் பேசியது:

    மேற்கு தொடர்ச்சி மலை மிகவும் பழமையானது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் குஜராத், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கியுள்ளன.

    நாட்டிற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மக்களை உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவர் அறைகூவல் விடுத்துள்ளார். எனவே, மேற்கு தொடர்ச்சி மலையையும் பாதுகாக்க அவர் போதிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

    பொதுமக்கள் பங்களிப்புடன் பழங்குடி மக்களை அகற்றாமல், மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையை அங்குள்ள பழங்குடி மக்களால்தான் பாதுகாக்க முடியும்.

    வளர்ச்சி என்ற பெயரில் மலைகளில் ஒப்பந்த ராஜ்யம் நடக்கிறது. அதாவது கனிம சுரங்கம் அமைப்பது போன்றவை மூலம் மலைகளில் உள்ள இயற்கை வளம் சுரண்டப்படுகிறது. இயற்கையின் கொடையான மலையில் உள்ள வளத்தை அழித்து பயன் அடைவது ஒப்பந்ததாரர்கள்தான். இதுபோன்ற சுரண்டல்களால் இயற்கை பேரழிவுகளும் ஏற்படுகின்றன. மலை வளமும் அழிக்கப்படுகிறது. எனவே, சுரண்டல்களை தடுத்து, இயற்கை வளத்தை காக்க வேண்டும்.

    மத்திய அரசு, பல்லுயிர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. ஆனால், தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோல வன உரிமை சட்டத்தையும் சரியாக பின்பற்றவில்லை. இதுபோன்ற சட்டங்களைப் பின்பற்றி மேற்கு தொடர்ச்சி மலையை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

    பன்னாட்டு நிறுவனங்கள் ஏராளமான தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைக்கின்றன. நாம் தாற்காலிக வளர்ச்சி என்ற பெயரில் தொழிற்சாலைகளை அனுமதிக்கிறோம். ஆனால், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் அதிகளவில் சந்திக்கிறோம். இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் தொழிற்சாலைகளை அனுமதிக்கக் கூடாது என்றார்.

    கருத்தரங்கில் இயற்கை ஆர்வலர்கள் பேராசிரியர் பி.ஜே.ஜேம்ஸ், பொன் சந்திரன், குமார், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai