சுடச்சுட

    

    பாரதியார் பல்கலை. முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தீர்மானம்

    By கோவை,  |   Published on : 30th June 2014 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம், கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் பி.எஸ்.சந்திரசேகர், பொதுச் செயலாளர் எம்.ரவிச்சந்திரன், துணைத் தலைவர் சி.பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:

    கோவையில் இயங்கி வரும் சிபிஎம் கலை அறிவியல் கல்லூரி, தனியார் நிறுவனம் போல செயல்படுகிறது. எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. நிதி முறைகேடுகளும் நடந்து வருகின்றன. எனவே, இக்கல்லூரியை நிர்வகிக்க சிறப்பு அலுவலரை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.

    அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 3,120 ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. ஆசிரியர் நியமனங்களில் உயர்கல்வித் துறை நேரிடையாக தலையிடுகிறது. எனவே, ஆசிரியர் நியமனத்தை முறையாக கடைப்பிடிக்க முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். மேலும், உதவி பெறும் கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்ட ஆசிரியர் நியமனங்களை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சுயநிதிக் கல்லூரிகளை கண்காணிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊதியத்தை உயர்த்தி வழங்கவும், ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.

    திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் எவ்வித காரணமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி கிடைக்கவும், தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க புதிய முறையையும், விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். தகுதியானவர்கள்தான் அப்பதவியில் அமர வேண்டும்.

    கோவை பாரதியார் பல்கலைக்கழக செயல்பாடு அதிருப்தி அளிப்பதாக உள்ளது. நிர்வாக சீர்கேடு நடந்து வருகிறது. தொலைதூர கல்விக் கூடத்தில் நியமிக்கப்பட்டுள்ள தேசிய ஒருங்கிணைப்பாளர், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு எதிராக கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளார். தொலைதூர கல்விக் கூடத்தின் கீழ் அமைக்கப்படும் தனியார் மையங்களுக்கு அனுமதி தருவதன் மூலம் பல கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. மேலும், தொலைதூர கல்விக் கூடத்தில் எம்.எட். படிப்பு தொடங்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் போலி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் பல்வேறு முறைகேடுகளை களைய தமிழக ஆளுநர் உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    நிரந்தர கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் மண்டல இயக்குநர்களை நியமிக்க வேண்டும். பொறுப்பு அலுவலர்களை நியமிப்பதால் பல்வேறு சிக்கல் எழுகிறது.

    பாரதிதாசன், பாரதியார், திருவள்ளுவர், பெரியார் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பதிவாளர், தேர்வு மைய கட்டுப்பாட்டாளர், தேசிய நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களில் நிரந்தர அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai