Enable Javscript for better performance
நேருக்கு நேர் நிகழ்ச்சி: ஒரே மேடையில் 5 கட்சி வேட்பாளர்கள் - Dinamani

சுடச்சுட

    

    கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஒரே மேடையில் கலந்துகொண்ட நேருக்கு நேர் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

    அறம் அறக்கட்டளை, பேரூர் தமிழ்க் கல்லூரி இணைந்து நடத்திய "நேருக்கு நேர்-2014' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேட்பாளர்கள், கல்லூரி மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தனர்.

    இதில் ஒருசில கேள்விகளுக்கு வேட்பாளர்கள் அளித்த பதில் விவரம்:

    ஆம் ஆத்மி: உலக அளவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் ஆற்றல் படைத்தவர்களாகத் திகழ்கின்றனர். அவர்களால் ஏழை, எளிய மக்களுக்கு சமுதாயப் பணியாற்ற முடியும். இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றுவதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அரசியல், பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் மனித வளம் பிற நாடுகளுக்கு அடகுவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பொன்.சந்திரன் தெரிவித்தார்.

    காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சி சார்பில் அடுத்து வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனுபவம் முக்கியம். அப்போதுதான் தில்லியில் நிலவும் சூழ்நிலையை புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் என காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.பிரபு கூறினார்.

    திமுக: பண பலம், ஆள் பலம், வாரிசு பலம் இல்லாத தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரசியலில் சேர்ந்து பணியாற்ற வயது முக்கியமில்லை என திமுக வேட்பாளர் கணேஷ்குமார் தெரிவித்தார்.

    மார்க்சிஸ்ட்: நேர்மையாக இருப்பதன் மூலம் வறுமையை சந்திக்க நேரிடும். ஆனால் வறுமையிலும் நேர்மையுடன் இருக்க வேண்டும்.

    வறுமையை பழகிக் கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்தார்.

    பாஜக: ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். இதுவே தங்கள் கட்சியின் கொள்கை. நதிகளை இணைப்பது, தரமான உரம், குறைந்த வட்டியில் கடன் போன்றவற்றை அரசு வழங்குவதன் மூலம் விவசாயத்தை ஊக்குவிக்க முடியும் என பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாசல அடிகளார், கௌமார மடாலய ஆதீனம் குமரகுருபர அடிகளார், அறம் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் ரகுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai