Enable Javscript for better performance
பொள்ளாச்சியில் வேட்பாளரை நிறுத்தியது ஏன்? இந்திய மக்கள்  இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சியில் வேட்பாளரை நிறுத்தியது ஏன்? இந்திய மக்கள்  இயக்கம்

    By dn  |   Published on : 27th March 2014 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவில் எத்தனாலை வாகன எரிபொருளாக்க வேண்டும் என்பதற்காகவே பொள்ளாச்சியில் வேட்பாளரை நிறுத்தியுள்ளதாக இந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இந்த இயக்கத்தின் கள அமைப்பாளர் செ.நல்லசாமி, கோவையில்  செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

    அமெரிக்காவிலும், பிரேசிலிலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டபோது அங்குள்ளவர்கள் எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இப்போது அந்த நாடுகள் நன்கு வளர்ந்துள்ளன.

    எத்தனாலை வாகன எரிபொருளாகப் பயனபடுத்துவதை வலியுறுத்தி, கோவையில் இருந்து தில்லி வரை வாகனப் பிரசாரத்தை இந்திய மக்கள் இயக்கம் மேற்கொண்டது. இது தொடர்பாக பிரதமர், மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என மொத்தம் 550 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் யாரும் இதற்குப் பதிலளிக்கவில்லை.

    எந்த அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இந்தப் பிரச்னை குறித்து தெரிவிக்கப்படவில்லை. ராணுவ தளவாடங்கள் முழுமையாக இறக்குமதி செய்யப்படுகின்றன.

     இதற்குப் பதிலாக அனைத்தையும் இங்கேயே தயாரிக்க வேண்டும்.

    எத்தனால் தயாரிப்பதற்காக கரும்பு, சோளம் ஆகியவற்றைப் பயிரிட வேண்டும். இதற்கு நதிகளை இணைக்க வேண்டும். கள்ளில் இருந்து எத்தனால் தயாரிக்கலாம்.

    பொள்ளாச்சியில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளன. இங்குதான் கள் இயக்கத்துக்குப் பெருமளவில் ஆதரவு உள்ளது. எத்தனால் தயாரிப்பது தொடர்பாக பொள்ளாச்சியில் ஏற்றப்படும் தீபம், நாட்டிலுள்ள பிற பகுதிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும்.

    இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவே பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறோம்.

    தமிழகத்தில் மட்டுமில்லாமல் நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் வேட்பாளர்கள் இந்திய மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட வந்தால் அவர்களை வரவேற்கிறோம். பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், வரும் 29-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்றார் நல்லசாமி.

    இந்திய மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர்கள் பி.எம். பழனிச்சாமி, சி.கோபாலகிருஷ்ணன், வேட்பாளர் சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு அமைப்பின் பொதுச் செயலர் துரை, பி.ஏ.பி. பாசன சபைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai