Enable Javscript for better performance
கோவையின் அடையாளமாகிறது ஜி.டி. கார் அருங்காட்சியகம்- Dinamani

சுடச்சுட

    

    கோவையின் அடையாளமாகிறது ஜி.டி. கார் அருங்காட்சியகம்

    By கோவை  |   Published on : 28th April 2015 05:18 AM  |   அ+அ அ-   |    |  

    மறைந்த தொழிலதிபர், ஆராய்ச்சியாளர் ஜி.டி. நாயுடுவின் கனவை நனவாக்கும் விதமாக அவரது வாரிசுகள், உலகின் மிகவும் பழைமையான கார்களைக் கொண்ட அருங்காட்சியகத்தை கோவையில் உருவாக்கியுள்ளனர்.

     கோவையைச் சேர்ந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு (ஜி.டி. நாயுடு), கல்வி நிறுவனங்களுக்குச் செல்லாமலேயே மிகப் பெரிய ஆராய்ச்சியாளராக, கண்டுபிடிப்பாளராகத் திகழ்ந்தவர்.

     வேளாண்மை, மின்சாரம், இயந்திரவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏராளமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் காட்டிய இவர், தனது கண்டுபிடிப்புகள் அனைத்தும் நாட்டு மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக அவற்றை காப்புரிமை செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

     தமிழகத்தின் மிகப் பெரிய தொழிலதிபராக இருந்த இவர், விலை உயர்ந்த, சொகுசு கார்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். உலகின் முன்னணி கார் நிறுவனங்களின் தயாரிப்புகளை விலைக்கு வாங்கி, கோவையில் அருங்காட்சியகம் அமைக்கத் திட்டமிட்டிருந்தார்.

     ஆனால் அவரது முயற்சிகள் கைகூடாத நிலையில் கடந்த 1974-ம் ஆண்டு அவர் மறைந்தார். இந்நிலையில் ஜி.டி. நாயுடுவின் கார் அருங்காட்சியக கனவை நனவாக்க அவரது வாரிசுகள் திட்டமிட்டனர். இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகள், தில்லி, கோவா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பழைமையான, அரிய வகை, சொகுசு கார்களை சேகரிக்கத் தொடங்கினர்.

     சுமார் 60 கார்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் அவற்றை கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி. நாயுடு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் வைத்து, நிரந்தரக் கண்காட்சியாக மாற்றியுள்ளனர். இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

     இந்த விழாவில், இந்தூர் அருகேயுள்ள பார்வானி பகுதியின் ராஜாவான மன்வீர் சிங், பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், சென்னை கிளிரிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைவர் வி.சுமந்தரன், ஜி.டி. நாயுடு அறக்கட்டளைத் தலைவரும் ஜி.டி. நாயுடுவின் மகனுமான ஜி.டி.கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     கோவை மாநகருக்கும், தமிழகத்துக்கும் புதிய விஷயமான இந்த கார் அருங்காட்சியகத்தில் வோக்ஸ்வேகன், ரோல்ஸ் ராய்ஸ், போர்டு, பென்ஸ், அம்பாசிடர், பியட், போர்ச், காடிலாக், மோரிஸ் கோவ்லி புல்நோஸ்  உள்ளிட்ட பல்வேறு பிரபல நிறுவனங்களின் 60-க்கும் மேற்பட்ட பழைமையான கார்கள் இடம் பெற்றுள்ளன.

     கடந்த 1886-ல் பென்ஸ் நிறுவனம் தயாரித்த உலகின் முதல் காரான பென்ஸ் மோட்டார் வேகன் என்ற காரின் மாதிரியும், அமெரிக்காவின் பிரபல நிறுவனமான மோரிஸ் கோவ்லி முதலில் தயாரித்த மோரிஸ் கோவ்லி புல்நோஸ் கார்களில் ஒன்றும் இங்கு உள்ளது. மோரிஸ் கோவ்லி நிறுவனத்தின் இந்த மாடலில் மொத்தம் 1,450 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     மேலும், பெரியார் ஈ.வெ.ரா. தனது சுற்றுப் பயணத்துக்கு பயன்படுத்திய வாகனமும், ஜி.டி. நாயுடுவின் யுனைடெட் மோட்டார் சர்வீஸ் நிறுவனம் சார்பில் கோவையில் இருந்து பழனிக்கு இயக்கி வந்த ஒரு பேருந்தும் இடம் பெற்றுள்ளது. அத்துடன், இந்த அருங்காட்சியகத்தில் சொகுசு கார்களுடன் சில பந்தயக் கார்களும் இடம் பெற்றுள்ளன.

     பொதுமக்களில் பெரும்பான்மையோர் இதுவரை கண்டிராத கார்களை காட்சிப்படுத்துவதன் மூலம், பழைமையான பொருள்களின் சிறப்புகளையும், கடந்த 200 ஆண்டுகளில் வாகனப் பொறியியலின் வளர்ச்சி எத்தனை தொலைவைக் கடந்துள்ளது என்பதையும், அதைச் சார்ந்த வரலாற்று நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடியும்.

     மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொது மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியம், நாட்டில் வேறு எங்கும் காண முடியாத தனிச்சிறப்பு வாய்ந்த, பழைமையான கார்களைக் கொண்டுள்ளது. நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் எப்போதாவது நடைபெறும் கண்காட்சியில் மட்டுமே காணக் கிடைக்கும் இந்த வகை கார்களை, கோவையில் நினைத்த நேரத்தில் காணக் கூடிய நிலை உருவாகியிருப்பதன் மூலம் கோவை மாநகரம், விரைவில் தென்னிந்தியாவின் அடையாளமாக மாறும் என்றார் ஜி.டி.கோபால்.

     ஜி.டி. நாயுடு கார்கள் அருங்காட்சியகம் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

     இதற்கான நுழைவுக் கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp