Enable Javscript for better performance
சீரப்பாளையத்தில் கிராம சபைக் கூட்டம்:பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார் ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    சீரப்பாளையத்தில் கிராம சபைக் கூட்டம்:பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார் ஆட்சியர்

    By கோவை,  |   Published on : 27th January 2015 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சீரப்பாளையம் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மக்களிடம் இருந்து ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

    குடியரசு தினத்தையொட்டி, சீரப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட போடிப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் எம்.கணேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் பார்வையாளராகக் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில், அக்டோபர் 2014 முதல் டிசம்பர் 2014 வரையிலான செலவினம் குறித்தும், திட்ட அறிக்கை, குடிநீர் விநியோகம், ஊரக கட்டடங்கள், பராமரிப்பு, சீரமைப்புத் திட்டம், டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சீமைக் கருவேல மரங்களை அழித்தல், தனிநபர் கழிப்பிடம் கட்ட ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஆட்சியர், பொதுமக்கள் இதுபோன்ற கூட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் பகுதிக்குத் தேவையான பணிகளைத் தேர்வு செய்து செயல்படுத்த வேண்டும். குடும்ப அட்டைகளில் உள்தாள் பெறாதவர்கள் உடனடியாக பெற்றுப் பயனடைய வேண்டும்.

    பொதுமக்கள் தங்களது வீடுகளிலும் சுற்றுப் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவாதவாறு விழிப்புடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் மலம் கழிப்பதைத் தவிர்த்து வீடுகளில் தனிநபர் கழிப்பறை விரைந்து கட்டிக்கொள்ள வேண்டும் என்றார்.

    ஊராட்சிகள் உதவி இயக்குநர் செல்வம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டப் பணிகள் மாவட்டத் திட்ட அலுவலர் மணிமேகலை, மதுக்கரை வட்டாட்சியர் சக்திவேல், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) லீலா உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai