Enable Javscript for better performance
பாரதியார் பல்கலை.யில் பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால முகாம்: ஏப்ரல் 25 முதல் 29 வரை நடக்கிறது- Dinamani

சுடச்சுட

    

    பாரதியார் பல்கலை.யில் பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால முகாம்: ஏப்ரல் 25 முதல் 29 வரை நடக்கிறது

    By கோவை  |   Published on : 15th April 2016 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடைக்கால முகாம் ஏப்ரல் 25 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

     இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

     பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆ.கணபதியின் வழிகாட்டுதலின்படி, பல்கலைக்கழக மானியக் குழுவின் மனிதவள மேம்பாட்டு மையம், உயிர் தொழில்நுட்பவியல் துறை ஆகியன இணைந்து குறிஞ்சி என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடைக்கால முகாமை நடத்தத் திட்டமிட்டுள்ளன. இந்த முகாம் ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் உள்ள தற்காலப் போக்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

     மேலும், மொழியியல், நுண் தொழில்நுட்பவியல், உயிர் தொழில்நுட்பவியல், தகவல் தொழில்நுட்பவியல் உள்ளிட்ட பாடங்களிலும் கவனம் செலுத்தப்பட உள்ளது. இந்த முகாமில் துறை சார்ந்த தலைப்புகளில் பேராசிரியர்கள் உரையாற்ற உள்ளனர். துறை சார்ந்த செய்முறைப் பயிற்சிகளின் மூலம் பாடங்களின் பயன்பாடுகள், துறை சார்ந்த வாய்ப்புகளும் விளக்கப்பட உள்ளன. மாணவர்கள் புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், அதை நடைமுறை வாழ்வில் பயன்படுத்தவும், விடுமுறைக் காலத்தை பயனுள்ள வகையில் கழித்திடவும் இதுபோன்ற பயிற்சி முகாம்கள் உதவும். அதற்காகவே பாடங்களுடன் விநாடி-வினா, ஓவியம் உள்ளிட்ட கலைகளை வளர்த்துக் கொள்ளவும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    இந்தச் சிறப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். இதற்கான பயிற்சிக் கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் மாணவர்களுக்கு சலுகை வழங்கவும், உணவு, தங்கும் வசதியும் ஏற்பாடு செய்து தரப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

     மேலும் விவரங்களுக்கு, உயிர் தொழில்நுட்பவியல் உதவிப் பேராசிரியர் சோ.இரா.பிரபாகரனை 98650 76485 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ, பல்கலைக்கழக மானியக் குழு, மனிதவள மேம்பாட்டு மைய இயக்குநர் இரா.மதிவாணனை 0422 - 2428221 என்ற தொலைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai