நன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு குறித்த பயிற்சி
By கோவை | Published On : 06th January 2016 04:22 AM | Last Updated : 06th January 2016 04:22 AM | அ+அ அ- |

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு குறித்த பயிற்சி பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக பூச்சியியல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பயிர்களில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் காரணிகளில் பூச்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மையத்தில் உயிரியல் முறை சார்ந்த பூச்சி கட்டுப்பாட்டுக்கு உதவும் ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள், பூச்சிகளை அழிக்கவல்ல பாக்டீரியாக்கள், நச்சுயிரிகள் பற்றிய தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில், பயிர் சாகுபடி செய்யும் உழவர்கள், பண்ணை மகளிர், வீட்டுத் தோட்ட காய்கறி சாகுபடியாளர்கள் குறிப்பாக பெண்கள், தொழில் முனைவோர், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த பயிற்சி பிப்ரவரி 11-ஆம் தேதி காலை 9 மணியளவில் பூச்சியியல் துறை வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்குபெற விரும்புவோர் 0422-6611414, 6611214 என்ற தொலைப்பேசி எண்களிலோ, வேளாண் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மையம், பூச்சியியல் துறையை நேரிலோ அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.