Enable Javscript for better performance
கோவையில் நாளை நில மீட்பு போராட்டம்: போராட்டக் குழு அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் நாளை நில மீட்பு போராட்டம்: போராட்டக் குழு அறிவிப்பு

    By DIN  |   Published on : 28th November 2016 07:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் ஆக்கிரமிப்பில் உள்ள பழங்குடியினர், தலித்துகளுக்கான நிலத்தை மீட்பதற்காக வரும் 29-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நில மீட்புப் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழு அறிவித்துள்ளது.
     கோவை காந்திபுரத்தில் நில மீட்பு போராட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், சிஐடியு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஆதித் தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி, இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
     கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: கோவை இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான 44.30 ஏக்கர் நிலம், நில உச்சவரம்பு சட்டத்தின்படி உபரி நிலமாக அறிவிக்கப்பட்டு கடந்த 1992-ஆம் ஆண்டில் 46 பேர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
     இந்த நிலத்தை காலம் காலமாக அனுபவித்து வரும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர், பட்டியல் இனத்தவர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிலத்தின் ஒரு பகுதியை போலி ஆவணங்கள் மூலம் விலைக்கு வாங்கிய சிலர், தற்போது முழு இடத்தையும் ஆக்கிரமிக்க முயன்று வருகின்றனர். எனவே, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமான அந்த நிலத்தை மாவட்ட நிர்வாகம் மீட்டு, உரிய மக்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கோரி, போராட்டக் குழு சார்பில் வரும் 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு நில மீட்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
     மேலும், இந்தப் போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.சண்முகம், மாதர் சங்க மாநிலத் துணைத் தலைவர் என்.அமிர்தம் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் போராட்டக் குழு அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai