Enable Javscript for better performance
பேருந்து-கார் மோதல்: இளைஞர்கள் மூவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம், குமரபுரம் அருகே தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர்.
     கேரள மாநிலம், மூணாறு, அடிமாலி என்ற கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து இரு பேருந்துகளில் 90 மாணவிகளும், 8 ஆசிரியர்களும் கடந்த 24-ஆம் தேதி சுற்றுலா வந்தனர். இவர்கள் மைசூரிலிருந்து உதகைக்கு 26-ஆம் தேதி வந்தனர். உதகையில் சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்த்த பின்னர், உதகையிலிருந்து அன்றிரவு 10 மணியளவில் மூணாறு புறப்பட்டனர்.
     மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, பள்ளிப் பேருந்தும், எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
     இதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த வினய் கார்த்திக் (22) என்ற இளைஞர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினார். விபத்தில் சிக்கிய பேருந்தின் முன்புறம் பலத்த சேதமடைந்தது.
     சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் போலீஸார், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்குப் போராடிய கார் ஓட்டுநர் வினய் கார்த்திக், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
     பின்னர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், விபத்தில் இறந்தவர்கள், கோவை- கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வினித் (21), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த சுனில் மகன் கரண் (21), ரத்தினபுரியைச் சேர்ந்த செந்தில்குமாரின் மகன் முத்துகுமார் (21) என்பது தெரியவந்தது.
     இவர்கள் மூவரும், நண்பர்கள் 12 பேருடன் கோவையிலிருந்து 3 கார்களில் சனிக்கிழமை உதகைக்கு சுற்றுலா வந்ததும் தெரியவந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் சென்றவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
     விபத்தில் சிக்கிய பேருந்தில் வந்த மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் மாற்றுப் பேருந்து மூலம் மூணாறு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai