Enable Javscript for better performance
காஷ்மீரில் சட்டம்- ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது: சி.ஆர்.பி.எஃப். டிஜிபி- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீரில் சட்டம்- ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது: சி.ஆர்.பி.எஃப். டிஜிபி

    By DIN  |   Published on : 08th October 2016 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    காஷ்மீரில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது என்று சிஆர்பிஎஃப் இயக்குநர் துர்கா பிரசாத் தெரிவித்தார்.
    கோவை அருகே கதிர்நாயக்கன்பாளையத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சிக் கல்லூரியின் கோவை கிளையில் 251 குடியிருப்புகள், 264 பயிற்சி விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, மூலிகைப் பண்ணை பூங்கா திறப்பு விழா ஆகியன வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
    கல்லூரி முதல்வர் சுனில்குமார் ராய் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சிஆர்பிஎஃப் டிஜிபி கே.துர்கா பிரசாத் கலந்து கொண்டு புதிய கட்டடங்கள் கட்டும் பணியை அடிக்கல் நாட்டித் தொடங்கிவைத்து, மூலிகைப் பண்ணையைத் திறந்து வைத்தார்.
    அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
    இங்கு, மொத்தம் 251 குடும்பங்கள் மற்றும் 264 பயிற்சி துணை ஆய்வாளர்கள் தங்குவதற்கு ஏற்ப ரூ. 50 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. இப்பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும்.
    உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மத்திய ரிசர்வ் படைப் பிரிவு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாநிலங்களுக்கு இடையிலான பாதுகாப்பு பிரச்னைகள், நக்ஸல் தடுப்பு ஆகிய பணிகளில் ஈடுபடுகிறது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த மூன்று மாதங்களாகப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சிறப்பாக சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பை சிஆர்பிஎப் மேற்கொண்டு வருகிறது. சிஆர்பிஎஃப் படைப் பிரிவுக்கு என தனியாக உளவுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதன் தகவல்களின் அடிப்படையில் செயல்படுகிறது.
    தற்போது உள்ள அதிவிரைவுப் படைகளின் எண்ணிக்கை 10-இல் இருந்து 15ஆக அதிகரிக்கப்படும். பட்டாலியன்களின் எண்ணிக்கையை 239-இல் இருந்து 250 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் பட்டாலியன்களின் எண்ணிக்கையை 4-இல் இருந்து 6ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    மத்திய ரிசர்வ் படையில் கடந்த ஆண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 9 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 40 வீரர்கள் நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்துள்ளனர். கோவை குருடம்பாளையத்தில் உள்ள கல்லூரியில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. சமீபத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்த போதிலும், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய ரிசர்வ் படையில் போதிய வீரர்கள் உள்ளனர். அத்துடன் நவீன ரக ஆயுதங்களும் தயார் நிலையில் உள்ளன என்றார்.
    சிஆர்பிஎஃப் ஏ.டி.ஜி.பி. ஷைலேந்திரகுமார், ஐ.ஜி. (பயிற்சி) விஜய்சிங் யாதவ், எஸ்.பி.காஜல், சுதிர்குமார், சஞ்சீவ்குமார், லிங்கேஷ்வரன், ராஜா உள்ளிட்ட அதிகாரிகள், வீரர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai