Enable Javscript for better performance
கோவை அருகே ஒரே நாளில் இரு யானைகள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் இரு யானைகள் வெவ்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.
    கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வசித்து வருகின்றன. இதில், வெள்ளிங்கிரி, ஆலாந்துறை, ஓணாப்பாளையம், தொண்டாமுத்தூர், மருதமலை, மதுக்கரை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் யானைகள் அதிகமாக உள்ளன. இந்த யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் வன எல்லையை ஒட்டிய கிராமங்களுக்குள் அவ்வப்போது புகுந்து விடுகின்றன. அவ்வாறு புகுவதால் யானை-மனித எதிர்கொள்ளலும் ஏற்படுகிறது.
    இந்த நிலையில், ஆலாந்துறை அருகே உள்ள வளையன்குட்டையை அடுத்த வேங்கைமரத்துக்காடு வனப் பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்கு அப்பகுதி பொது மக்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின்படி, சம்பவ இடத்துக்குச் சென்று மதுக்கரை வனத் துறையினர் பார்வையிட்டனர். இந்த யானை உடல் நலக்குறைவால் உயிரிழந்ததா அல்லது யானைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததா என்பது பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரிய வரும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.
    சிறுமுகை அருகே பெண் யானை சாவு: அதே போல், சிறுமுகை வனச் சரகத்துக்கு உள்பட்ட பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் வேட்டை தடுப்புக் காவலர்கள் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, பெத்திக்குட்டையை அடுத்த கருப்பராயன் கோயில் அருகே சுமார் 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்துகிடப்பது தெரியவந்தது.
    இதையடுத்து, அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சிறுமுகை வனச் சரகர் மனோகரன், மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம், மாவட்ட வன கால்நடை மருத்துவர் மனோகரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், அந்த யானைக்கு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், யானையின் சில பாகங்கள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனையின் முடிவில் யானை உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.
    கோவை மாவட்ட வனப் பகுதிகளில் ஒரே நாளில் இரு யானைகள் உயிரிழந்தது வன விலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுத் தலைவர் ஆர்.முகம்மது சலீம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில், வேறு எங்கும் இல்லாத நிகழ்வாக சுமார் 10-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. இதில், மதுக்கரை, சிறுமுகை வனச் சரகங்களில் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளன.
    எனவே, வனத் துறையினர் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியும், நோய்வாய்ப்படும் யானைகளுக்குத் தகுந்த நேரத்தில் உரிய சிகிச்சையும் அளிக்க வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai