Enable Javscript for better performance
பஞ்சு வியாபாரியிடம் 150 பவுன், ரூ.40 லட்சம் கொள்ளை:காவலர் சீருடையில் 2 பேர் வந்ததாக புதிய தகவல்- Dinamani

சுடச்சுட

    

    பஞ்சு வியாபாரியிடம் 150 பவுன், ரூ.40 லட்சம் கொள்ளை: காவலர் சீருடையில் 2 பேர் வந்ததாக புதிய தகவல்

    By DIN  |   Published on : 08th October 2016 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் பஞ்சு வியாபாரியிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் போல் நடித்து 150 பவுன் நகை மற்றும் ரூ. 40 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் காவலர் சீருடையில் இருவர் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
    கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள ராமானுஜ நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பஷீர் (53). இவர், நூற்பாலைகளில் மொத்தமாகப் பஞ்சு வாங்கி, விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டுக்கு இரண்டு கார்களில் 12 பேர் கடந்த புதன்கிழமை வந்துள்ளனர். அவர்கள், தங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் என பஷீரிடம் அறிமுகம் செய்துள்ளனர். இதையடுத்து, வீட்டை சோதனையிட வேண்டும் எனக் கூறி, வீட்டில் இருந்த நபர்களை தனி அறையில் வைத்துப் பூட்டிவிட்டு, பஷீரிடம் இருந்து ஆவணங்களையும், லாக்கரில் இருந்து 150 பவுன் நகைகள், ரூ.40 லட்சம் ரொக்கத்தையும் அக்கும்பல் கொள்ளையடித்துக் கொண்டு, பஷீரையும் தங்களுடன் காரில் அழைத்துச் சென்றனர்.
    அக்கும்பல், கோவை அருகே நீலாம்பூர் புறவழிச் சாலையில் பஷீரை கீழே இறக்கிவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றது. இது குறித்து பஷீர், சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக கோவை மாநகரக் காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவின்பேரில் துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) அ.லட்சுமியின் நேரடி மேற்பார்வையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    வருமான வரித் துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட இக்கும்பலில், இருவர் காவலர் சீருடை அணிந்திருந்ததாக விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது. பஷீர் வீட்டில் இருந்து கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற செல்லிடப்பேசிகளைத் தொடர்பு கொள்ள முடியாதவாறு செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது. சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் கொள்ளைக் கும்பல் பயன்படுத்திய வெள்ளை, சாம்பல் நிற கார்களின் பதிவு எண்கள் தெளிவாகத் தெரியாததாலும் விசாரணையில் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
    பஷீரின் குடும்பப் பின்னணி, தொழிலில் போட்டியாக இருக்கும் நபர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரிடமும் தனிப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, கார் கடத்தல், பணம் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் கொள்ளையிலும் காவலர் சீருடையில் இருவர் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai