Enable Javscript for better performance
வடகிழக்கு பருவ மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறி- Dinamani

சுடச்சுட

    

    வடகிழக்கு பருவ மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 08th October 2016 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடகிழக்கு பருவ மழையையொட்டி மழைநீர் வடியும் வகையில் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று அகாரிகளுக்கு ஆட்சியர் த.ந.ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார்.
    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழையையொட்டி, முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள வேணடிய பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    அப்போது, ஆட்சியர் த.ந.ஹரிஹரன் பேசியதாவது:
    வடகிழக்குப் பருவமழைக் காலம் துவங்கியதையொட்டி, மாவட்டத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் முழுமையாகக் கண்காணித்து தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை முன்கூட்டியே அறிந்து, தண்ணீர் தேங்காமல்
    வடிந்திடும் வகையில் கால்வாய்களை தூர்வாரி தயார் நிலையில் வைக்க வேண்டும்.
    நெடுஞ்சாலை துறையின் மூலம் போக்குவரத்து சாலைகளை அவ்வப்போது கண்காணித்துவருவதுடன், பாதிப்பு ஏற்படும் பகுதிகளை உடனுக்குடன் சரி செய்யும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். பொதுப் பணித் துறை மூலம் ஓடைப் பகுதிகள், கண்மாய்கள் ஆகியவற்றின் நீர்நிலைத் தன்மை குறித்து கண்காணிப்பதுடன், மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் திடீரென மழைநீர் தேங்கும்பட்சத்தில், மக்களைப் பாதுகாக்கும் வகையில் படகுகள் போன்ற பாதுகாப்பான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
    பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் முழுமையாகக் கண்காணித்து, பள்ளி
    வளாகங்களில் தண்ணீர் தேங்குவதாகக் கண்டறிந்தால், உடனடியாக சரி செய்து, தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    பொது சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவக் குழுவை தயார் நிலையில் வைத்துக்கொள்வதுடன், தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கிருமிநாசி மருந்துகளை தெளித்திட வேண்டும். மழைக் காலங்களில் பொதுமக்கள் தண்ணீரைக் காய்ச்சி குடிக்க அறிவுறுத்த வேண்டும்.
    கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கால்நடைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம் நடத்திட வேண்டும். மாவட்ட வழங்கல் துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கும் பொருள்கள் நியாயவிலைக் கடைகளில் போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதிப்புகள் ஏற்படும்பட்சத்தில் பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக திருமண மண்டபங்கள், பள்ளிக் கட்டடங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். காவல் துறை, தீயணைப்புத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதுடன் அனைத்து அலுவலர்களும் முழு கவனம் எடுத்து வடகிழக்குப் பருவமழையின் போது மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றார்.
    ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரூபன் சங்கரராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிதம்பரம்,
    கோட்டாட்சியர்கள் சின்னசாமி, சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai