Enable Javscript for better performance
நீதிமன்றத் தடையால் தொழில் பாதிப்பு: ரியல் எஸ்டேட் வர்த்தகர் கூட்டமைப்பு கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    நீதிமன்றத் தடையால் தொழில் பாதிப்பு: ரியல் எஸ்டேட் வர்த்தகர் கூட்டமைப்பு கோரிக்கை

    By DIN  |   Published on : 19th October 2016 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத வீடு மற்றும் வீட்டுமனைப் பிரிவுகளை பதிவு செய்ய உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை நீக்க தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
    கோவை, சின்னியம்பாளையத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் கூட்டமைப்பின் கவன ஈர்ப்பு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    இக்கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் தேசியத் தலைவர் ஹென்றி, கொங்கு மண்டலத் தலைவர் நேரு நகர் நந்து, மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
    தமிழகத்தில் பட்டா மனைகளையும், அங்கீகாரம் பெறாமல் கட்டடப்பட்டுள்ள வீட்டுமனைப் பிரிவுகளையும் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டித் தரும் பத்திரப் பதிவுத் துறைக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    மேலும், அங்கீகாரம் பெறாமல் மனைகளை வாங்கிக் கட்டடப்பட்டுள்ள வீடுகளை இனி விற்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால், அடித்தட்டு, நடுத்தர மக்கள் சொந்தமாக நிலம் வாங்கி, வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுமானத் துறை வீழ்ச்சி அடைவதுடன், இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    எனவே, தமிழக அரசின் பத்திரப் பதிவுத் துறை, ஏற்கெனவே நிலங்களின் மீதான வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்து, பதிவு செய்த வீட்டுமனைப் பிரிவுகளையும், வீடுகளையும் பதிவு செய்யவும், மறுபதிவு செய்யவும் அனுமதிக்க ஆவன செய்ய வேண்டும்.
    சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை போக்க தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    இக்கூட்டத்தில் கோவை மாவட்ட வீட்டுமனை மற்றும் குடியிருப்பு அபிவிருத்தியாளர்கள் சங்கத் தலைவர் வி.வி.வாசன், தமிழ்நாடு பத்திரம், நகல் எழுதுவோர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஈஸ்வரன், அகில இந்திய ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ராஜசேகர், அகில இந்திய ரியல் எஸ்டேட் வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவர் குலசேகரன், அகில இந்திய லே-அவுட் புரமோட்டர்ஸ் தெற்குப் பகுதிச் செயலாளர் கே.புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai