நாய்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் இயற்ற கோரிக்கை

நாடு முழுவதிலும் நாய்களைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் புதிய சட்டமியற்ற வேண்டும் என்று மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Updated on
1 min read

நாடு முழுவதிலும் நாய்களைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் புதிய சட்டமியற்ற வேண்டும் என்று மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவுக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு நாய்க்கடிக்கான தடுப்பூசி மருந்துகள் எவ்வளவு வாங்கப்பட்டன, அதற்கு ஆன தொகை எவ்வளவு என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக பொது சுகாதாரம், நோய்த் தடுப்புத் துறையிடம் கேட்டிருந்தேன்.
அதற்கு அரசு பதிலளித்துள்ள நிலையில், கடந்த 2015-16 ஆம் ஆண்டில் ரூ. 9.87 கோடி செலவில் 7.92 லட்சம் குப்பிகளும், 2016-17-ஆம் ஆண்டில் ரூ.10.50 கோடி செலவில் 8.86 லட்சம் குப்பிகளும் வாங்கப்பட்டிருப்பதாகவும், முந்தைய ஆண்டைக் காட்டிலும் சுமார் 94 ஆயிரம் யூனிட்டுகள் அதிகம் வாங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு யூனிட் மருந்தை 5 பேர்களுக்கு வழங்க முடியும் என்ற நிலையில், தமிழகத்தில் நாய்க்கடியால் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதைத் தவிர தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சென்றவர்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் 2 லட்சம் அதிகரிக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. உலக அளவில் நாய்க்கடி மூலம் பரவும் ரேபிஸ் நோய் மிகவும் கொடுமையானது என்றும் இந்நோய்க்கு உயிரிழப்பவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், தெரு நாய்களைக் கடுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எந்த தீவிர நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எனவே லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் இந்த நாய்க்கடி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மூல காரணமான நாய்களைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் புதிய சட்டங்களை இயற்ற வேண்டும். அதேநேரம், அரசு மருத்துவமனைக்காக வாங்கும் நாய்க்கடி தடுப்பு மருந்துக்கு ஒரு நபருக்கு 4 முறை போடுவதற்கும் சேர்த்து ரூ.100 மட்டுமே செலவாகிறது.
ஆனால், தனியாரிடம் இந்த மருந்து ஒரு முறை போடுவதற்கே ரூ.325-க்கு விற்கப்படுகிறது. ஒரு மருந்து நிறுவனம், அரசுக்கு விற்பனை செய்யும் அதே மருந்தை 13 மடங்கு அதிக விலைக்கு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்கிறது. இந்த விலை வித்தியாசத்தை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com