மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நிலப் பட்டா பெற ஜூன் 30-ஆம் தேதி இறுதி நாளாகும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்த அறிக்கை:
தமிழக அரசு உத்தரவின்படி, வருவாய் பின்தொடர் பணியின்கீழ் வருவாய்ப் பதிவேடுகளில் இதுநாள் வரையிலான பதிவுகளைச் சரிசெய்து நில உரிமையாளர்களுக்கு ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உபட்ட பட்டா பகுதிகளில் கிரையம் அல்லது பூர்வீகம் மூலமாக பாத்தியப்பட்ட வீடுகள், மனைகள், விவசாய நிலங்களுக்கும், நத்தப் புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி வசிப்பவர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
ஓடந்துறை வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட நகராட்சிப் பகுதிகளான வார்டு-ஏ, பிளாக் 1 முதல் 6 முடிய (கோத்தகிரி சாலை, ராமசாமி நகர், ஊமப்பாளையம் சாலை, ரஹ்மான் காலனி, நரிப்பள்ளம் சாலை, உதகை சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தோட்டப் பகுதிகள்) இப்பணி முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் இப்பகுதிகளுக்கான தூய கணக்குகள் தயார் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட உள்ளன.
இனி வரும் காலங்களில் இத்திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் ஆவணங்கள் முக்கியமாகக் கருதப்படுவதால் இதுவரை பட்டா பெறாதவர்கள் தங்கள் சொத்துக்குரிய ஆவணங்களை மேட்டுப்பாளையம் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியரிடம் தாக்கல் செய்து, இத்திட்டத்தின் மூலமாகப் புகைப்படத்துடன் கூடிய பட்டா பெற்றுப் பயனடைய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஓடந்துறை வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட நகராட்சிப் பகுதிகளில் இதுவரை 376 நகர் புல எண்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன. 54 இனங்களில் ஆவணங்கள் முழுமையாக இல்லாததாலும், 260 இனங்களில் நில உரிமையாளர்கள் விசாரணைக்கு ஆஜராகி ஆவணங்கள் வழங்காததாலும் பட்டா வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
எனவே, விசாரணைக்கு ஆஜராகாத நபர்களும், முழுமையாக ஆவணங்களைத் தாக்கல் செய் யாதவர்களும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் மேட்டுப்பாளையம் நகர நிலவரித் திட்டத் தனி வட்டாட்சியரை அணுகி, பட்டா பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.