தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற ஆசிய அளவிலான முதலாவது யோகா போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவி தங்கம் வென்றுள்ளார்.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் ஆசிய அளவிலான முதலாவது யோகா போட்டிகள் மே 13, 14-ஆம் தேதிகளில் நடைபெற்றன.
இதில், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில், 13-15 வயதுக்குள்பட்டோருக்கான ஜூனியர் பிரிவில் கோவை பார்க் குளோபல் பள்ளியின் மாணவி வைஷ்ணவி தங்கம் வென்றார். அத்துடன், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றார்.
சாதனை படைத்த மாணவிக்கான பாராட்டு விழா, கோவை பார்க் குளோபல் பள்ளி சார்பில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், கோவை பார்க் கல்விக் குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி அனுஷா ரவி கலந்து கொண்டு மாணவிக்குப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டிப் பேசினார். பள்ளி முதல்வர் ஹெச்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவி வைஷ்ணவி இதற்கு முன்பு இந்தோனேஷியா, தாய்லாந்து, இலங்கை நாடுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
மேலும், இவர் 30 நிமிடங்களில் 596 ஆசனங்களையும், ஒரு நிமிடத்தில் 47 ஆசனங்களையும் செய்து இந்திய அளவிலான சாதனைப் புத்தகத்திலும், ஒரு நிமிடத்தில் 64 ஆசனங்களைச் செய்து ஆசிய உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றிருப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.