பொள்ளாச்சி அருகே தடம் புரண்ட நெல்லை - புணே சிறப்பு ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் புதன்கிழமை மீட்கப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களையும் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலியிலிருந்து பொள்ளாச்சி - பாலக்காடு மார்க்கமாக புணேவுக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பொள்ளாச்சியில் இருந்து 12.2 கி.மீ. தொலைவில், மீனாட்சிபுரம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது, ரயில் பாதை அருகில் இருந்த ராட்சத மரம் ரயில் என்ஜின் மீதும், அதன் அருகில் இருந்த பொருள்கள் வைக்கும் பெட்டி மீதும் விழுந்தது. இதில், ரயில் என்ஜின் மற்றும் 7 பெட்டிகள் தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, ராட்சத கிரேன், நவீன மீட்பு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு புதன்கிழமை அதிகாலையிலிருந்து சேலம், பாலக்காடு கோட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 20 மணிநேரம் இந்த மீட்புப் பணி நடைபெற்றது.
சேதமடைந்த ரயில் என்ஜின், பாலக்காட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட என்ஜின் மூலமாக மீனாட்சிபுரத்துக்கும், பெட்டிகள் பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்கும் கொண்டு செல்லப்பட்டன. சேதமடைந்த தண்டவாளமும் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காட்டுக்கு புதன்கிழமை இரவு 9 மணிக்கு செல்லும் ரயில் சுமார் 1.30 மணிநேரம் தாமதமாகச் செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.